மிரட்டி பணம் பறித்தல், கொலை வழக்கில் தலைமறைவு ஐபிஎஸ் அதிகாரி ‘தலைக்கு’ ரூ. 50,000 உத்தரபிரதேச போலீஸ் அறிவிப்பு

லக்னோ:மிரட்டி பணம் பறித்தல், கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ஐபிஎஸ் அதிகாரி ‘தலைக்கு’ ரூ.50,000 பரிசுத் தொகையை உத்தரபிரதேச போலீசார் அறிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்ட போலீஸ் எஸ்பி மணிலால் பட்டிதர், கப்ராய் நகரில் வசிக்கும் இந்திரகாந்த் திரிபாதி என்பவரிடம் லஞ்சம் கேட்ட வீடியோ கடந்த செப். 7 அன்று சமூக ஊடகங்களில் வைரலாகியது. இந்த வீடியோ வைரலாகிய  இரண்டாவது நாளான செப். 8ம் தேதி இந்திரகாந்த் திரிபாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த  வழக்கில், தொழிலதிபர் இந்திர காந்தின் சகோதரர் ரவிகாந்த்  திரிபாதி கொடுத்த புகாரின்படி, அப்போதைய எஸ்பி மணிலால் பட்டிதர் இடைநீக்கமும், போலீசார் தேவேந்திர குமார் சுக்லா மற்றும்  அருண்குமார் யாதவ் ஆகியோர் பணிநீக்கமும் செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு மிரட்டி பணம் பறித்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில், ஐபிஎஸ் அதிகாரி கடந்த 3 மாதமாக தலைமறைவாக உள்ளார். மேலும், அவருக்கு எதிராக மாவட்ட மற்றும் உயர்நீதிமன்றம் ஏற்கனவே முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதற்கிடையே உத்தரபிரதேச போலீசார் ஐபிஎஸ் அதிகாரியைத் தேடுவதில்  மும்முரமாக உள்ளனர். இவர் குறித்து தகவல் கொடுக்கும் நபருக்கு ரூ.25 ஆயிரம் பரிசு அறிவித்தனர். ஆனால், இப்போது பரிசுத் தொகையை ரூ.50  ஆயிரமாக அதிகரித்துள்ளனர். மேலும், முக்கிய இடங்களில் அவரது புைகப்படமும் போலீசார் தரப்பில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரியின் தலைமறைவு உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>