தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் நிரம்பியது: 7 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம்

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் குளம் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி 7 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் உப்பாற்று ஓடையின் கரையில் உடைப்பு ஏற்பட்டு உப்பளங்கள், விவசாய நிலங்களை வெள்ளநீர் சூழ்ந்தது.

புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பின. இதேபோல தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் குளமும் வேகமாக நிரம்பியது. பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் இரவு முதல் ஒவ்வொரு மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றும் பணி துவங்கியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்க துவங்கியதால் 7 மதகுகள் வரை திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் உப்பாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்திமரப்பட்டி கோரம்பள்ளம் இடையிலான தாம்போதி பாலத்தை தாண்டி வெள்ளநீர் சென்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பராமரிப்பு பணி மேற்கொண்ட 6ம் தரிசு எனப்படும் பகுதியில் குளத்தின் கரை தாழ்வாக இருந்ததால் அந்தபகுதி வழியாக வெள்ள நீர் வெளியேற துவங்கியது.

தொடர்ந்து நீர் வரத்து குறையாததால் அடுத்தடுத்து 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள உப்பளங்கள் நீரால் சூழப்பட்டது. உப்பளங்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. உப்பளங்களை தொடர்ந்து விளைநிலங்களையும் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் சுமார் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளன. வெள்ளநீரால் கரை உடையாமல் பாதுகாக்க இரவு முழுவதும் காவல் இருந்தும் கரை உடைந்து விவசாயநிலங்களை வெள்ளம் சூழ்ந்து நிற்பது அந்தபகுதிவிவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து குறையாததால் வயல் பகுதியை ஒட்டிய தாழ்வான பகுதியான ஜெஎஸ்நகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்தபகுதியில் வசிப்பவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். தொடர்ந்து தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து வருவதால் அருகில் உள்ள சுந்தர்நகர், பாரதிநகர், பொன்னான்டிநகர், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, சவேரியார்புரம் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

முறையாக தூர்வாரவில்லை

கடந்த காலங்களில் கோரம்பள்ளம் குளம் முறையாக தூர்வாரப்படாததால் கருவேலமரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் ஆங்காங்கே மணல் திட்டுகளாக காணப்படுவதால் குளத்தில் போதுமான தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பெயரளவிற்கு தான் குளம் உள்ளதே தவிர தண்ணீர் சேமிக்க முடியாமல் மழை நேரங்களில் கிடைக்கும் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று விடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories:

>