×

விவசாயிகளுக்காக நடைபெறும் பாரத் பந்த் வெல்லட்டும். மூன்று வேளாண் சட்டங்களும் நொறுங்கட்டும் :திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்

சென்னை : விவசாயிகளுக்காக நடைபெறும் பாரத் பந்த் வெல்லட்டும். மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் புதிய திட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) “பாரத் பந்த்” என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க. உள்பட 24 கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. மேலும் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ். உள்பட 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்து உள்ளன. மேலும் வங்கி ஊழியர்கள், அகில இந்திய ரெயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய ரெயில்வே பணியாளர்கள் தேசிய கூட்டமைப்பு ஆகிய 2 ரெயில்வே சங்கங்கள், மாநில அரசு ஊழியர் சங்கங்கள், மாணவர்கள், பெண்கள் அமைப்புகள், விவசாய அமைப்புகள் இன்று நடத்தும் “பாரத் பந்த்” போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

இன்று காலை விவசாயிகள் அறிவித்தப்படி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கேரளா, ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், சத்தீஷ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய 11 மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் முழுமையாக இருந்தது. பெரும்பாலான மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் நாடு முழுவதும் 9, 19, 24, 44 மற்றும் 48 எண்கள் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு!!

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைகிறது!

உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள்!

உழவு என்பது தொழில் மட்டுமல்ல. நம் அனைவரின் உரிமை!

#StandWithFarmers என நடைபெறும் #BharatBandh வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Bharat Bandh ,Stalin ,DMK , Farmers, Bharat Bandh, Let's Win, Three Agricultural Laws, Break, DMK, Stalin, Tweet
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...