×

ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஸ்மித் தொடர்ந்து நம்பர் 1: 2வது இடத்தில் கேன், விராட் கோஹ்லி

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 2 இடங்கள் முன்னேறி இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கிடையே சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கி சூடு பிடித்து வருகின்றன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது.

பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் ஆஸி. நட்சத்திரம் ஸ்டீவன் ஸ்மித் 911 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த முதல் டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய நியூசி. கேப்டன் வில்லியம்சன் 2 இடங்கள் முன்னேறி உள்ளார். அவர் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் தலா 886 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். நடப்பு தரவரிசையின் டாப் 10ல் இடம் பெற்றுள்ள 2வது இந்திய வீரர் என்ற பெருமை செதேஷ்வர் புஜாராவுக்கு (766 புள்ளி) கிடைத்துள்ளது. பந்துவீச்சு தரவரிசையில், ஆஸி. வேகம் பேட் கம்மின்ஸ் (900) முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ஜஸ்பிரித் பூம்ரா 9வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (446 புள்ளி) முதலிடம் வகிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (397) 3வது இடத்திலும், ஆர்.அஷ்வின் (281) 6வது இடத்திலும் உள்ளனர்.

Tags : Kane ,Virat Kohli ,Smith ,ICC Test , Kane and Virat Kohli are ranked No. 1 and No. 2 in the ICC Test rankings following Smith
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...