ஆஸி.யுடன் இன்று 3வது டி20 ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, சிட்னியில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.40க்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும் அடுத்து நடைபெற்று வரும் டி20 தொடரில் தொடர்ச்சியாக 2 வெற்றிகளுடன் முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றி பதிலடி கொடுத்துள்ளது. கடைசி ஒருநாள் போட்டியையும் சேர்த்து, தொடர்ந்து 3 வெற்றிகளை வசப்படுத்தி உள்ளதால் இந்திய வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில், சிட்னியில் இன்று நடக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. ராகுல், தவான், கேப்டன் கோஹ்லி, ஷ்ரேயாஸ், சாம்சன், ஹர்திக் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளதால் பேட்டிங் வரிசை மிக வலுவாக உள்ளது.

‘யார்க்கர் கிங்’ நடராஜனின் துல்லியமான வேகப் பந்துவீச்சு இந்திய அணிக்கு கூடுதல் சாதகம். கடந்த 2016ல் ஆஸி. சென்று விளையாடியபோதும் ஒருநாள் தொடரில் சொதப்பிய இந்திய அணி, அடுத்து டி20 தொடரில் அபாரமாக விளையாடி 3-0 என ஒயிட்வாஷ் செய்தது குறிப்பிடத்தக்கது. அதே வகையிலான வெற்றிக்காக இந்திய வீரர்கள் வரிந்துகட்டுகின்றனர். மேலும், அடுத்து விளையாட உள்ள கடினமான டெஸ்ட் தொடரை தன்னம்பிக்கையுடன் அணுகவும் இது உதவும். அதே சமயம், ஆறுதல் வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணியும் கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை. வார்னர், பிஞ்ச், ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் ஆல் ரவுண்டர்கள் மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் மீதான சுமை கூடியுள்ளது. இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் உள்ளதால் ஆட்டத்தில் கடைசி பந்து வரை அனல் பறப்பது உறுதி.     

Related Stories:

>