×

கூடுதல் விலையில் வேக கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் ஸ்டிக்கர் போக்குவரத்து துறையில் ரூ.2000 கோடிக்கு மேல் ஊழல்: லாரி உரிமையாளர் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு

சேலம்: வேக கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் ஸ்டிக்கர் போன்றவற்றை கூடுதல் விலைக்கு விற்று ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று லாரி உரிமையாளர் சங்கங்கம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது. தென்மாநில லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சண்முகப்பா நேற்று சேலத்தில் அளித்த பேட்டி: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், லாரிகளுக்கான வேகக் கட்டுப்பாட்டு கருவி தமிழகத்தில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த கருவி கர்நாடகாவில் ரூ.1500க்கு விற்கப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் அரசு குறிப்பிட்ட 8 நிறுவனங்களில் ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒளிரும் ஸ்டிக்கர் வெளி மாநிலங்களில் 600 ரூபாய்க்கு விற்கும்போது, தமிழகத்தில் 6,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது தவிர ஜிபிஎஸ் கருவி, வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர் ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருவதால் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.1000 கோடிக்கு மேல் கூடுதல் செலவாகும்.
குறிப்பிட்ட சில நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்பதை தளர்த்தவும், கூடுதல் விலை குறித்தும் பல முறை தமிழக போக்குவரத்து அமைச்சர், முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் காரணமாகத்தான் வரும் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 4 லட்சத்து 65 ஆயிரம் லாரிகளும் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடும். அரசின் நிர்ப்பந்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இந்த கருவிகளை தர நிர்ணயம் பெற்ற 49 நிறுவனங்களில் பெற்றுகொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், குறிப்பிட்ட இரண்டு நிறவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்களை தமிழக போக்குவரத்து அமைச்சரும், அதிகாரிகளும் மிரட்டி வருகின்றனர். இதில் உள்நோக்கம் உள்ளது. இந்த கருவிகள் கூடுதல் விலைக்கு விற்றதில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர், துறை சார்ந்த அதிகாரிகளிடம் தமிழக முதல்வர் விசாரணை நடத்த முன் வரவேண்டும். இவ்வாறு சண்முகப்பா தெரிவித்தார்.

சிபிஐ விசாரணை தேவை: நாமக்கல்லில் தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் மாநில தலைவர் செல்ல.ராசாமணி அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில், ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்களுக்கு தகுதிச்சான்று புதுப்பிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு கருவிகள் வழங்க அனுமதி அளித்ததன் மூலம், சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. எனவே, இது குறித்து விசாரிக்க, மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என்றார்.

* வேகக்கட்டுப்பாட்டு கருவி கர்நாடகாவில் ரூ.1,500.
* தமிழகத்தில் அரசு குறிப்பிட்ட 8 நிறுவனங்களில் ரூ.10,000.
* ஒளிரும் ஸ்டிக்கர் வெளி மாநிலங்களில் ரூ.600.
* தமிழகத்தில் ரூ.6,000.

Tags : Truck Owners Association , Over Rs 2,000 crore scam in transport sector with overpriced speed limiter and flashing sticker: Truck Owners Association
× RELATED பாரத் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் லாரிகள் ஸ்டிரைக்