டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வங்கியை முற்றுகை

மதுராந்தகம்: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வங்கியை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிக்கும் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மதுராந்தகம் ஸ்டேட் பாங்க் அருகே மதுராந்தகம் வட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது.

மதுராந்தகம் வட்ட செயலாளர் கே.வாசுதேவன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் சசிகுமார், அர்ஜுன்குமார் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர்கள் பிரமிளா, மோகனன் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் மதுராந்தகம் - திண்டிவனம் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில்ம்  ஈடுபட்டனர். இதனால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து மதுராந்தகம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். இதையடுத்து மறியலை கைவிட்ட அவர்கள், அருகில் இருந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியை முற்றுகையிட முயன்றனர். அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்து, அங்கிருந்த தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா சூனாம்பேடு பஜார் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், சூனாம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். தகவலறிந்து சூனாம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 67 பேரை கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்

* விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, காஞ்சிபுரத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நேரு தலைமை தாங்கினார். நிர்வாகிகள்  சங்கர், சாரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயத்தையும், விவசாயிகளையும் சீரழிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும். விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது. டெல்லியில் போராடும் விவசாயிகளை காவல்துறை மூலம் ஒடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் நிர்வாகிகள் டில்லிபாய், ஜீவா, புவனேஸ்வரி, பெருமாள், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>