தொடரும் மழையால் வடியாத வெள்ள நீர் சென்னை புறநகர் குட்டி தீவுகளாக மாறியதால் வீட்டு மாடிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்

* முன்வாசல் முதல் பின்வாசல் வரை வீட்டில் தேங்கும் நீர்

* உணவு, பால் பொருட்கள் கிடைக்காமல் அவதி

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புரெவி புயல் காரணமாக பெய்த மழையை தொடர்ந்து நேற்று அதிகாலையும் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.  வீட்டின் முன் பகுதியில் இருந்து படுக்கையறை, கிச்சன், ஹால் என பின்வாசல் வரை தேங்கி உள்ள 3 அடி உயரத்துக்கு நீர் சூழ்ந்ததால் மக்கள் மாடிகளில் தஞ்சம் அடைந்தனர. மேலும் அவர்களுக்கு காய்கறி, பால், மளிகை பொருட்கள் வாங்க  முடியாத அளவுக்கு சாலைகள் தண்ணீரில் மூழ்கியது.  ‘புரெவி’ புயல் காரணமாக கடந்த 2ம்தேதி இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் கனமழை பெய்ததால். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்து. இதனால், தனித்தீவாக மாறியுள்ளது. தெரு முழுவதும் தேங்கிய தண்ணீர் வடிய வழி இல்லாத காரணத்தால் அருகில் உள்ள வீட்டின் ஜன்னல் வரை சுமார் 3 அடி உயரத்துக்கு புகுந்துவிட்டது.  சில இடங்களில் தண்ணீர் அப்படியே கீழ்தள குடியிருப்பையும் மூழ்கடித்துள்ளது.

மேலும், மழைநீர், கழிவுநீர் மற்றும் பூச்சிகள் அந்த தண்ணீரில் மிதந்தபடியே குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அவற்றை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்கள் வீட்டின் முதல் மொட்டை மாடி வரை சென்று தஞ்சமடைந்துள்ளனர். எனினும், அவர்கள் லட்சக்கணக்கில் செலவிட்டு வாங்கிய கார், பைக், கம்ப்யூட்டர் மற்றும் டிவி போன்றவை தண்ணீரில் மூழ்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தினசரி வரும் பால் பாக்கெட், தினசரி பத்திரிகை, மாளிகை பொருட்கள், ஆன்லைன் ஆர்டரில் வரும் பொருட்கள், காஸ், தபால், கொரியர் உள்பட எதுவும் அவ்வளவு சீக்கிரமாக வருவதில்லை. காரணம் சாலையில் 3 அடி தண்ணீர் தேங்குவதால் வெளியாட்கள் வர தயக்கம் காட்டுகின்றனர். எனவே, பல்வேறு சோதனைகளை சந்தித்த பிறகே குடியிருப்பு வாசிகளில் சிலர் தைரியமாக வெளியில் சென்று பொருட்களை வாங்கி வந்து தங்கள் உணவு பிரச்னையை தீர்த்து கொள்கின்றனர். ஏறக்குறைய இப்பகுதி சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டித்து தனித்தீவாகவே காணப்படுகிறது.

இதே நிலை இன்னும் தொடர்ந்தால் தேங்கிய நீரில் கழிவுநீரும் கலந்து வருவதால் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே உடனடியாக தேங்கிய நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை?

சென்னையில் தி.நகர் அபிபுல்லா சாலை, பெரியார் நகர் ஜெகநாதன்  தெரு, கம்பர் நகர், அசோக் அவென்யூ, மணலி வீனஸ்நகர், பால சுப்பிரமணியம்நகர்,  கொளத்தூர் பூம்புகார் நகர் ஆகிய இடங்களில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. வில்லிவாக்கம் பாபா நகரில் 150 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இங்கு ஒரு அடி முதல் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதேபோன்று, வேளச்சேரி,  ஊரப்பாக்கம், முடிச்சூர், பெரம்பூர், ஓட்டேரி, வியாசர்பாடி, புளியந்தோப்பு, செம்மஞ்சேரி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தனித்தீவாக காணப்படுகிறது.

Related Stories:

>