சூரப்பா தொடர்பான ஆவணம் ஒப்படைக்காத அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஆஜராக சம்மன்: விசாரணை ஆணையம் உத்தரவு

சென்னை: துணைவேந்தர் சூரப்பா தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்காத அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. துணை வேந்தர் சூரப்பா தமிழக அரசை மதிக்காமல் அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்த்து கோரி கடிதம் எழுதியது, பல்கலைக்கழகத்தில் 200 கோடி நிதி முறைகேடு, பணி நியமனத்தில் 80 கோடி லஞ்சம் வாங்கியது என மொத்தம் 280 கோடி லஞ்சம் வாங்கியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் துணைவேந்தர் சூரப்பா மீது எழுந்தது.  இதையடுத்து தமிழக அரசு தாமாக முன் வந்து சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழுவை நவம்பர் 11ம் தேதி அமைத்தது. மேலும் மூன்று மாதங்களுக்குள் சூரப்பா மீதான புகார்களை விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து சூரப்பா மீது புகார் அளிப்பவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம் என நீதிபதி கலையரசன் தெரிவித்திருந்தார். இதையடுத்து inquirycomn.vc.annauniv@gmail.com என்ற இ-மெயில் மற்றும் தொலைபேசி மூலம் ஏராளமானவர்கள் புகார் அளித்தனர். இந்தநிலையில், துணைவேந்தர் சூரப்பா மீது நாளுக்கு நாள் புகார் வந்து கொண்டே இருப்பதால் புகார் அளிக்கும் நாட்களை மேலும் 10 நாட்களுக்கு டிசம்பர் 9ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் துணைவேந்தர் சூரப்பா விசாரணை தொடர்பான ஆவணங்களை விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை ஆவணங்களை ஒப்படைக்காததால் அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு சம்மன் அனுப்பி ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும் படி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>