×

அலைசறுக்கு விளையாட்டில் கடலில் மூழ்கிய மகளை மீட்க முயன்ற தந்தை பலி: திருவான்மியூரில் விபரீதம்

சென்னை: பெசன்ட் நகர் கடலில் அலை சறுக்கு விளையாடியபோது ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மகளை காப்பாற்ற முயன்ற தந்தை பரிதாபமாக  உயிரிழந்தார்.  சென்னை பெசன்ட் நகர், வண்ணாந்துறை எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி(55). இவரது மகள் ரேவதி (11). தி. நகரில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று காலை இருவரும் பெசன்ட்நகர் கடற்கரைக்கு சென்றனர். அப்போது, சர்ப்பிஃங் எனச் சொல்லப்படும் அலை சறுக்கு பயிற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில், கடலின் சீற்றம் அதிகமாகி ராட்சத அலைகள் ஆர்ப்பரித்து வரத் தொடங்கின. இதனைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த பாலாஜி, தனது மகளை கரைக்கு திரும்பும்படி அழைத்தார்.

அலையின் சீற்றம் மற்றும் பெரும் சத்தம் காரணமாக, இவரது குரல் ரேவதிக்கு கேட்கவில்லை. இதனால், அச்சிறுமி தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து, ராட்சத அலையில் சிக்கிய ரேவதி, கடலில் விழுந்து தத்தளித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலாஜி, அலறியபடி கடலுக்குள் இறங்கி தன் மகளை  காப்பாற்ற முயன்றார். ஆனால், இருவரையும் ராட்சத அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இவர்களது அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மீனவர்கள், இருவரையும் காப்பாற்ற முயன்றனர். இதில் சிறுமி ரேவதியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால்  ஒரு மணி நேரத்திற்கு பிறகு பாலாஜியின் சடலம் திருவான்மியூர் கடற்கரையில் ஒதுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Thiruvanmiyur , Father killed while trying to rescue daughter drowning in surfing: Tragedy in Thiruvanmiyur
× RELATED ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படுகின்ற...