மழைநீர் வடிகாலில் விழுந்து தாய், மகள் பலி: சென்னை மாநகராட்சி ஆணையர், காஞ்சி ஆட்சியர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..!!

சென்னை: சென்னை நொளம்பூரில் மழைநீர் வடிகால் கால்வாய் முறையாக மூடப்படாததால் தாய், மகள் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்த நோட்டீஸுக்கு 3 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காஞ்சிபுரம் ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கத்தில் வசித்து வந்த தனியார் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் கரோலின், தனது மகளுடன் நேற்று மாலை அருகிலுள்ள கடைவீதிக்கு சென்றுள்ளார். தாம்பரம் - மதுரை பைபாஸ் சாலையில் நொளம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி  மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்துள்ளார். சம்பவம் நிகழ்ந்த சில நேரத்திலேயே இருவரும் கால்வாயில் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் காலை முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இந்நிகழ்வினை தாமாக முன்வந்து வழக்கு விசாரணை எடுத்துக் கொண்டுள்ளார். தாய், மகள் கால்வாயில் எவ்வகையில் தவறி விழுந்தனர். மழைநீர் வடிகால் கால்வாய் முறையான பராமரிப்பின்றி திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருப்பது ஏன்? உள்ளிட்டவை தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காஞ்சிபுரம் ஆட்சியர் ஆகியோர் 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நொளம்பூரில் பாதுகாப்பற்ற மழைநீர் வடிகால் கால்வாயில் ஏற்கனவே 10 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மீண்டும் 2 பேர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விபத்துகள் தொடர்கதையாகி வருவதால் அக்கால்வாயை உடனடியாக மூட வேண்டும் என்று அப்பகுதி வாசிகள் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், காஞ்சிபுரம் ஆட்சியருக்கும் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து நோட்டீஸும் அனுப்பப்பட்டிருக்கிறது.

Related Stories:

>