×

மன்னவனூரில் கேரட், வெள்ளைப்பூண்டு உருளை விவசாயம் நாசம்: காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் காட்டுப் பன்றிகளால் கேரட், வெள்ளைப்பூண்டு, உருளைக்கிழங்கு பயிர்கள் நாசமாகி வருகின்றன. எனவே, காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் தொல்லையால் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். மன்னவனூர், பூம்பாறை ,கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாய விளைபொருட்கள் சேதமடைந்து விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

மன்னவனூர் பகுதியில் விவசாயி விவேக் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த காட்டுப்பன்றி கூட்டம், கேரட், வெள்ளைப் பூண்டு பயிர்களை நாசம் செய்துள்ளன. இதனால் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை சேதம் ஏற்பட்டுள்ளது. இதே பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்திற்குள் புகுந்த காட்டுப்பன்றிகளின் கூட்டம், உருளைக்கிழங்கு மற்றும் கேரட் தோட்டங்களில் புகுந்து நாசம் செய்துள்ளன. அவருக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேல் மலைப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் பலர் இதுபோல காட்டுப்பன்றிகள் தொல்லையால் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி விவேக் கூறுகையில், இயற்கை பேரிடர் ஒருபுறம் எங்களைத் தாக்கி மிகுந்த நஷ்டம் அடைந்து வருகின்றோம். இது ஒருபுறமிருக்க காட்டுப்பன்றிகள் தொல்லை சமீபகாலமாக மிகவும் அதிகமாக உள்ளது. காட்டுப்பன்றிகள் விளை நிலங்களுக்குள் புகுந்து விளைபயிர்களை குறிப்பாக கேரட், உருளைக்கிழங்கு, வெள்ளைப் பூண்டு போன்றவற்றை நாசம் செய்து வருகின்றன.

ஒரு காட்டுப்பன்றி கூட்டம் விளை நிலங்களுக்குள் புகுந்தால் அந்த தோட்டம் முழுவதும் நாசமாகி விடும். இதற்கு தமிழக அரசு எங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அல்லது காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும். பல மாவட்டங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதுபோல கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags : Mannavanur , Wild boar
× RELATED கொடைக்கானல் மேல்மலை மற்றும் நகர்...