×

வெளியூர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை: கர்ப்பிணிகளை அலைக்கழிக்கும் உத்தமபாளையம் ஜி.ஹெச்

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் எடுப்பதில்லை; பிரசவம் பார்ப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. உத்தமபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, தினசரி 800 புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 72 பேர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். மூன்றாம் மாதத்தில் இருந்து கர்ப்பிணிகளுக்கு செக்அப், தடுப்பூசி, சத்துமாத்திரை வழங்கப்பட்டு, பிரசவ ஆலோசனை வழங்கப்பட்டது. மாதந்தோறும் 70 முதல் 80 வரை பிரசவங்கள் நடந்தன. 20 முதல் 30 வரை சிசேரியன்களும் நடந்தன. தாலுகா தலைநகரம் என்பதால் கர்ப்பிணிகள் 24 மணிநேரமும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது கர்ப்பிணிகளுக்கு போதிய சிகிச்சை அளிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மருத்துவமனையில் உள்ள நவீன ஸ்கேன் கருவி பயனற்று கிடக்கிறது. கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு வந்தால் கோம்பை, தேவாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்புவதாக கூறப்படுகிறது. மேலும் கம்பம் அல்லது தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் தலைமை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது. எனவே, கூடுதல் மருத்துவர்களை நியமித்து, கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?
உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு தினசரி ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். மருத்துவர் பற்றாக்குறை உள்ளது. இங்குள்ள 2 மருத்துவர்களும், வெளி டூட்டிக்கு செல்கின்றனர். இது குறித்து தேனி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் கண்டுகொள்வதில்லை. நோயாளிகள், கர்ப்பிணிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : women , Pregnant
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ