×

செய்யாறு, போளூர், வந்தவாசி, சேத்துப்பட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு 18 ஏரிகள் நிரம்பியது

செய்யாறு: செய்யாறு அருகே சித்தாத்தூர் ஏரி 5 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி வழிந்தது. இதனால், கிராம மக்கள் மலர்தூவி வரவேற்றனர். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா சித்தாத்தூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நிரம்பி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து அதிகரிப்பால், உபரி நீர் கலங்களில் விழ தொடங்கியது. இதை கண்ட கிராம மக்கள் மலர் தூவி கற்பூரம் ஏற்றி வரவேற்றனர்.

போளூர்: புரெவி புயல் காரணமாக போளூர் மற்றும் ஜவ்வாதுமலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 72 ஏரிகளில் துரிஞ்சிகுப்பம், வெள்ளுர், நாராயணமங்கலம், நரசிங்கபுரம், பாப்பாம்பாடி, பெரிகரம் பெரியஏரி, தாங்கல் ஏரி, ஏரிக்குப்பம், கண்ணனுர் என்று 9 ஏரிகள் நிரம்பியது. பெரிய ஏரி 3 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி கோடி போனதால், அக்கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர். மேலும், 10 ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளன.

வந்தவாசி: வந்தவாசி தாலுகாவில் சுமார் 300க்கும் அதிகமான ஏரிகளில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட மருதாடு ஏரி நேற்று அதிகாலை நிரம்பியது. இதனை தொடக்க வேளாண்மை கூட்டுவு வங்கி தலைவர் ஏ.லோக்கேஷ்வரன், இயக்குனர் எம்.சி.சந்திரன் மற்றும் விவசாயிகள் மலர் தூவியும், கற்பூரம் ஏற்றியும் வரவேற்றனர்.

மேலும், வெண்குன்றம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியும் நிரம்பியது. வல்லம் கிராமத்தில் தொடங்கும் சுகநதி வந்தவாசி நகரை அடைந்து, செம்பூர், பிருதூர், வழூர், கீழ்பாக்கம், கொவளை வழியாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியில் முடிவடையும். இந்நிலையில் நேற்று பிருதூர் கிராமத்தில் உள்ள பழைய தரைப்பாலத்தை கடந்து சுகநதியில் தண்ணீர் சென்றதால் அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்தனர்.

சேத்துப்பட்டு: தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி மலையாம்புரடைப்பகுதியில் உள்ள கைலாச ஏரி ஆகிய இரண்டு ஏரிகளும் கடந்த நிவர் புயல், தற்போதைய புரவை புயல் தொடர் மழையால் ஏரிகள் நிரம்பி கோடி போனது.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் சீர்வரிசையுடன் மேளதாளம், முழங்க ஊர்வலமாக சென்று பூஜை செய்து மலர்தூவி சேலை கோடிவிட்டனர். மேலும் கடந்த 5 வருடத்திற்கு பிறகு ஏரி நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : lakes ,Polur ,Chetput ,Vandavasi , Ceyyaru
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!