×

விந்தையான குரலில் சத்தமிட்டு மயங்கி விழும் நூற்றுக்கணக்கான மக்கள் : ஆந்திர முதல்வர் ஜெகன் நேரில் சென்று நலம் விசாரிப்பு!!

திருமலை: ஆநதிராவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூரில் கடந்த 4ம் தேதி இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களில் 3 பேர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் 10 பேர் சாலையில் மயங்கி விழுந்தனர். இதேபோல், நேற்றும் பலர் மயங்கி கீழே விழுந்தனர்.இதுவரை ஏலூர் தட்சிணை வீதி, கிழக்கு வீதி, அசோக் நகர், அருந்ததிபேட்டை போன்ற இடங்களில் 18 குழந்தைகள் உட்பட 300 பேர் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வித்தியாசமான குரலில் சத்தமிடுவதால் நோயின் தன்மை அறியாமல் மருத்துவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கை,கால் வலிப்பும் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டது. இதனால் ஒரு சிலர் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் திடீரென மயங்கி விழும் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஏலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நலம் விசாரித்துள்ளார். மேலும் அங்குள்ள மருத்துவர்களிடம் மர்ம நோயின் பின்னணி குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். அத்துடன் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றை ஏலூர் மருத்துவமனைக்கு விரையவும் ஜெகன்  உத்தரவிட்டுள்ளார்.

பின்னர்  பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிகிச்சையையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆந்திர ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மருத்துவ சேவையை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆந்திர மாநில மாநில சுகாதார ஆணையர் கட்டமனேனி பாஸ்கரும் எலுருவுக்கு வந்து நிலைமையை நேரில் பார்வையிட்டார். இதனிடையே மக்கள் திடீரென மயங்கி விழுவதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. குடிநீரில் கலப்படம் உள்ளதா? அல்லது சதிச் செயலா? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Jagan ,Hundreds ,faint ,Andhra , Andhra Pradesh Chief Minister, Jagan, Health, Inquiry, Voice
× RELATED தேர்தல் பிரசார யாத்திரையில் பயங்கரம்...