×

மதுரை - புனலூர் எக்ஸ்பிரசில் நாங்குநேரி, கோவில்பட்டி உள்ளிட்ட 9 நிறுத்தங்கள் ரத்து

நெல்லை: தென்மாவட்டங்களில் தற்போது எக்ஸ்பிரசாக இயக்கப்பட்டு வரும் மதுரை - புனலூர் ரயிலில் நாங்குநேரி, கடம்பூர் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களின் நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தென்மாவட்ட பயணிகள் பாதிப்பில் உள்ளனர். கேரளாவிற்கு அதிக நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளதால், தமிழக பயணிகள் திண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மதுரையிலிருந்து நெல்லை வழியாக புனலூருக்கு தினசரி இரவு நேர பயணிகள் ரயில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலை தென்மாவட்ட மக்கள் திருவனந்தபுரம் செல்லவும், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவும் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கொரோனாவை ஒட்டி இந்த ரயில் 9 மாதங்களாக இயக்கப்படவில்லை. ஊரடங்கு காலக்கட்டத்தில் வருவாயை காரணம் காட்டி இந்த ரயிலை எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

அதன்படி கடந்த டிசம்பர் 4ம் தேதி முதல் மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் நெல்லை, நாகர்கோவில் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்படும்போது சில நிறுத்தங்கள் ரத்து செய்யப்படுவது வாடிக்கைதான். ஆனால் தமிழகத்தில் அதிகம் பயணிக்கும் இந்த ரயிலில் 9 நிறுத்தங்கள் தமிழக எல்கைக்குள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேரளத்தில் குறைவான நிறுத்தங்களே ரத்து செய்யப்பட்டுள்ளன.

மதுரை - புனலூர் ரயில் 139 கி.மீ கேரளாவிலும், 272 கி.மீ தமிழகத்திலும் என மொத்தம் 410 கி.மீ தூரம் பயணிக்கிறது. இந்த ரயில் புனலூரிலிருந்து நெல்லை வழியாக மதுரைக்கு பயணிகள் ரயிலாக பயணிக்கும் போது 47 நிறுத்தமும், மறுமார்க்கத்தில் 44 நிறுத்தமும் முன்பு பயணிகள் ரயிலாக செல்லும்போது இருந்தன.

இப்போது எக்ஸ்பிரஸ் ஆக மாற்றப்பட்ட காரணத்தால் ரயில் நிறுத்தம் 47லிருந்து இரண்டு மார்க்கங்களிலும் 29ஆக குறைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 8 ரயில் நிலையங்கள் ரத்து செய்யப்பட்டு, 21 ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்கிறது. ஆனால் 272 கி.மீ தூரம் பயணிக்கும் தமிழகத்தில் 9 ரயில் நிலையங்களில் நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  8 நிறுத்தங்கள் மட்டுமே புதிய காலஅட்டவணைப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் மதுரையிலிருந்து புனலூர் மார்க்கம் பயணிக்கும் போது வள்ளியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. ஆனால் மறுமார்க்கமாக புனலூரிலிருந்து மதுரைக்கு வரும்போது வள்ளியூரில் நிற்காது. தமிழகத்தில் குழித்துறை மேற்கு, பள்ளியாடி, ஆரல்வாய்மொழி, வள்ளியூர், நாங்குநேரி, நாரைக்கிணறு, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர் ஆகிய 9 ரயில் நிலையங்கள் தற்போது எக்ஸ்பிரஸ் ரயில் என்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் கேரளாவில் குறி, சந்தன்தோப்பு, இரவுபுரம், காபில், வேளி என 8 நிறுத்தங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான அட்டவணை தயாரிக்கும் முன்பே கேரளவாசிகள் ரயில்வேயிடம் போராடி கூடுதல் நிறுத்தங்களை பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தென்மாவட்ட பயணிகள் சங்க நிர்வாகி ஸ்ரீராம் கூறுகையில், ‘‘மதுரை - புனலூர் பயணிகள் ரயிலை, எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றிவிட்டு தமிழகத்தில் நிறுத்தங்களை குறைத்துவிட்டனர்.

இந்த ரயிலின் கட்டணத்தை மட்டும் கூட்டியுள்ளனரே தவிர, வேகத்தை கூட்டவில்லை. குறைந்த தூரம் பயணிக்கும் கேரள எல்கையில், இந்த எக்ஸ்பிரஸ் அதிக நிறுத்தங்களில் நின்று செல்கிறது. தமிழக எல்கைக்குள் அதிக நேரம் பயணித்தாலும், நிறுத்தங்கள் குறைவு. இதனால் தென்மாவட்ட மக்களுக்கு பாதிப்பு அதிகம்’’ என்றார்.

ஆமை வேகத்தில் மாற்றமில்லை

மதுரை- புனலூர் எக்ஸ்பிரசிற்கு தற்போது 17 ரயில் நிலையங்களில் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டும், அதன் வேகத்தில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இதற்கு முன்பு புனலூர் மார்க்கமாக மணிக்கு 36 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டது. எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்பட்டபிறகு 2 கி.மீ வேகம் அதிகரித்து மணிக்கு 38 கி.மீ வேகத்தில் செல்கிறது. இதேபோல் மதுரை மார்க்கத்தில் பயணிகள் ரயிலாக சென்றபோது மணிக்கு 29 கி.மீ வேகத்தில் சென்ற ரயில், எக்ஸ்பிரஸ் ஆக மாறிய பிறகு 3 கி.மீ வேகம் அதிகரித்து மணிக்கு 32 கி.மீ வேகத்தில் இயக்கப்பட உள்ளது. பயணநேரம் 40 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

Tags : Madurai - Punalur Express ,Kovilpatti ,Nanguneri , Train, Nanguneri, Kovilpatti
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!