×

நிவர் புயலால் மின் கம்பம், மரங்கள் விழுந்ததால் அமிர்தி வன உயிரியல் பூங்கா 10 நாட்களாக மூடல்

வேலூர்: நிவர் புயலால் மின் கம்பம், மரங்கள் விழுந்ததால் அமிர்தி வன உயிரியல் பூங்கா கடந்த 10 நாட்களாக சுற்றுலா பயணிகள் பார்க்க திறக்கப்படவில்லை. மின்கம்பம், மரம் அகற்றும் பணிகள் முடிந்தும் திறக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக அமிர்தி வன உயிரியல் பூங்கா உள்ளது. வேலூரில் இருந்து 28 கி.மீ தொலைவில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த உயிரியல் பூங்கா 1967ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த உயிரியல் பூங்காவில் புள்ளி மான்கள், மயில்கள், முயல்கள், முதலைகள், நீர்ப்பறவைகள், மலைப்பாம்பு, முள்ளம்பன்றிகள், பருந்து, கண்ணாடி விரியன், நாகப்பாம்பு, காதல் பறவைகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும், பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த பூங்காவுக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும், கூடுதல் வன விலங்குகளை கொண்டு வர வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இதனால் அமிர்தி வன உயிரியல் பூங்கா மூடப்பட்டது.
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த மாதம் மீண்டும் அமிர்தி உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீண்டும் பூங்காவிற்கு வர தொடங்கினர்.

இதற்கிடையில், நிவர் புயலால் கடந்த 26ம் தேதி அமிர்தி உயிரியல் பூங்கா மூடப்பட்டது. அன்றைய தினத்தில் வீசிய பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது, பூங்காவில் இருந்த பழமையான 20 மரங்கள் விழுந்ததில், மின் ஒயர்கள் அறுந்து நடைபாதையில் விழுந்தது. மேலும் 2 மின்கம்பங்கள் உடைந்துள்ளது. இந்த விபத்தில் எந்ததொரு வன விலங்குகளும் படுகாயமடையவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மரங்கள் விழுந்ததால், அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதால், அமிர்தி உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நிவர் புயலால் அமிர்தி உயிரியல் பூங்காவில் இருந்து மரங்கள் முறிந்து விழுந்தது. மின் ஒயர் அறுந்து கிடக்கிறது. கடந்த 11 நாட்களாக பூங்காவில் விழுந்த மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேதமடைந்த 2 மின் கம்பங்களுக்கு பதிலாக புதிதாக மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்கு மின் வினியோகம் செய்யும் பணிகள் மட்டும் உள்ளது. ஓரிரு நாட்களில் பணிகள் முடிந்ததும் இந்த வாரம் அமிர்தி வன உயிரியல் பூங்கா பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்படும்’ என்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக அமிர்தி கொட்டாற்றில் நீர் வரத்தால், சுற்றுலா பயணிகள் அதிகமாக அமிர்தி சென்றனர். அங்கு பூங்காவிற்கும், கொட்டாற்று செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Tags : Amirthi Wildlife Sanctuary ,storm ,Nivar , Amirti Wildlife Sanctuary
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...