×

பெருங்களத்தூரில் ரயில் மீது கற்கள் வீசிய 50 பேர் மீது வழக்குப்பதிவு: வீடியோ ஆதாரங்களை வைத்து 5 பேரை கைது செய்தது போலீஸ்..!!

சென்னை: பெருங்களத்தூரில் ரயில் மீது கற்கள் வீசிய 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையில் முதற்கட்டமாக 5 பேரை கைது செய்துள்ளனர். வன்னியர்களுக்கு 20 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பாமக வன்னியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. கடந்த 1ம் தேதி பாமக நிர்வாகிகள் பலர் பேருந்துகள், வாகனங்கள் உள்ளிட்டவைகளில் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தனர். அச்சமயம் சென்னை பெருங்களத்தூர் போலீசார் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. தொடர்ந்து போலீசார் அனுமதி மறுத்ததால் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் அப்பகுதி வழியே சென்ற ரயில் மீது கற்களை கொண்டு கடுமையாக தாக்கினர். இதில் ரயில் கண்ணாடிகள் சேதமடைந்தது. அருகே கிடந்த இரும்பு துண்டுகளை தண்டவாளத்தின் குறுக்கே வீசினர். மேலும், அரசுக்கும், காவல் துறைக்கும் எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் ரயில் போக்குவரத்து தடைபட்டது.

இந்த காட்சிகள் முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வந்தது. ரயில் மீது கற்களை வீசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று பலரும் வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், பெருங்களத்தூரில் ரயில் மீது கல் வீசிய 50 பேர் மீதும், தாம்பரம் அருகே ரயில் மறியல் செய்த 300 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோ ஆதாரங்களை பல்வேறு மாவட்ட சிறப்பு போலீசாருக்கு தனிப்படை போலீசார் அனுப்பியிருந்தனர். இதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி, முனுசாமி, பழனிசாமி, தமிழ்ச்செல்வன், நந்தகுமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 50 பேரை பிடிக்க வீடியோ ஆதாரங்களுடன் ரயில்வே போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : persons ,Perungalathur , Perungalathur, train, stones, case, video, 5 arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...