×

கோவில்பட்டி வட்டாரத்தில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்: 49 ஆயிரம் ஏக்கர்​ உளுந்து பாசி பயிர்கள் பாதிப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டி வட்டாரத்தில் உளுந்து, பாசி பயறு செடிகளில் மஞ்சள் தேமல் வைரஸ் நோய் பரவி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்தில் புரட்டாசி முதல் வாரத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய் போன்றவை சுமார் நான்கரை லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 49 ஆயிரம் ஏக்டேரில் உளுந்து, பாசிபயறு பயிரிடப்பட்டுள்ளது.

உளுந்து பயிரிடப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகிறது. அடிஉரமாக டி.ஏ.பி 50 கிலோ விதையுடன் இடப்பட்டது. அதன்பின்னர் 35வது நாளில் யூரியா மேலுரமாக போடப்பட்டது. மேலும் இருமுறை பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது.
தற்போது செடிகள் ‘பூ’ பிடிக்கும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி வட்டாரத்தில் தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி செடிகள் பொதும்பிய நிலையில் காணப்படுகிறது. மேலும் பருவநிலை மாற்றத்தால் உளுந்து, பாசி பயறு செடிகளில் மஞ்சள் தேமல் வைரஸ் நோய் பரவி வருகிறது. இந்நோய் பரவிய செடிகளின் இலைகளில் மஞ்சள் நிறத்தில் ஓட்டை காணப்படுகிறது.

‘பூ’ பூத்து காய் பிடிக்கும் நேரத்தில் இதுபோன்ற வைரஸ் நோய் பரவி வருவதால் ‘காய்’ மணி பிடிக்காமல் தொளி பருத்து சதைக் காயாக மாறிவிடும். இந்நோயை கட்டுப்படுத்த பிரத்யேக மருந்துகள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். எனவே மஞ்சள் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பயிறு வகைகளை கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : area ,Kovilpatti , Urad, algae crops
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் காக்கி...