×

பிரெக்சிட் பேச்சுவார்த்தையில் முடிவை எட்டுவதில் சிக்கல்!: ஐரோப்பிய ஒன்றியம் - பிரிட்டன் இன்று மீண்டும் பேச திட்டம்..!!

பிரிட்டன்: அமெரிக்காவின் தடுமாற்றம், சீனாவின் எழுச்சியை தொடர்ந்து சர்வதேச அரசியலில் அதிகம் பேசப்படும் பொருளாக பிரெக்சிட் இருக்கிறது. இம்மாத இறுதியுடன் இது முழுமையாக அமலுக்கு வரும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் - பிரிட்டன் இடையிலான பேச்சுவார்த்தையில் இன்னும் ஒரு முடிவு வரவில்லை. இருதரப்புமே தன்னுடைய நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பதால் பிரெக்சிட் ஒப்பந்தம் கையேயுத்தாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் - பிரிட்டன் இன்று மீண்டும் பேச திட்டமிட்டுள்ளது. பிரிட்டனின் டேவிட் கேமரன், தெரசா மே ஆகிய இரண்டு பிரதமர்களை காவு வாங்கினாலும் கூட பிரெக்சிட் பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் நீள்கிறது. கடந்த ஜனவரி 1ம் தேதியே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன்  வெளியேறிவிட்டால் பொருளாதார வர்த்தக உறவுகளில் இன்னும் பழைய நிலையே நீடிக்கிறது. பிரெக்சிட்டிற்கு பிறகான புதிய விதிகளை தீர்மானிப்பதற்காக இருதரப்பும் பலசுற்று பேச்சுவார்த்தையை நடத்தியும், தீர்வு கிடைக்கவில்லை. காலக்கெடு இம்மாத 31ம் தேதியுடன் நிறைவடைவதால் பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் இருதரப்புக்கும் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

எனினும் முதல் நாளில் இருதரப்புமே விட்டுக்கொடுக்காததால் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுகுறித்து பிரிட்டன் அமைச்சர் ஜார்ச் தெரிவித்ததாவது, கடந்த அக்டோபரிலேயே ஒப்பந்தம் ஏதும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கான சாத்தியத்தை எதிர்கொள்ளவும் தயார்படுத்தியுள்ளோம். அதுதான் முடிவென்றால் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என தெரிவித்தார். மீன்பிடி உரிமை, வர்த்தகத்தில் சரிசமமான போட்டியை உறுதி செய்தல், எதிர்காலத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் ஆகிய 3 விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரிட்டனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது. அத்துடன் பிரிட்டனில் சர்வதேச ஒப்பந்தங்களை மீற அரசுக்கு அதிகாரம் கொடுக்கும் வகையில் பேசிக்கப்படும் புதிய சட்டமும் ஐரோப்பிய ஒன்றியத்தை கவலைகொள்ள செய்துள்ளது.

காலக்கெடு நிறைவடைய இன்னும் 3 வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், கிறிஸ்துமஸும் நெருங்கி வருகிறது. இந்த மிகக்குறுகிய கால அவகாசத்தில் முரண்பாடுகளை களைந்து பிரெக்சிட் ஒப்பந்தம் கையெழுத்தாகி அதனை ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகள் மற்றும் பிரிட்டன் நாடாளுமன்றங்கள் ஏற்றுக்கொள்வது கடினமாக காரியமே. ஒருவேளை டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்த முழு நடைமுறையும் முற்றுப்பெறாத பட்சத்தில் புத்தாண்டு தினத்தன்று பிரெக்சிட் ஒப்பந்தம் ஏதும் இல்லாமலேயே பிரிட்டன் முழுமையாக வெளியேறிவிடும். அவ்வாறான சூழல் எழுந்தால் இருதரப்புமே பாதிக்கப்படும் என்றாலும், பிரிட்டனே அதிகளவில் இழப்பை சந்திக்க நேரிடும் என்று சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.


Tags : talks ,EU ,Brexit ,Britain , Brexit, negotiations, issue, EU, UK
× RELATED விவசாயிகளின் விளைபொருளுக்கு நிலையான...