×

படை வீரர்களின் தன்னலமற்ற சேவையை போற்றுவோம்: ஆளுநர், முதல்வர் கொடி நாள் வாழ்த்து

சென்னை: கொடி நாள் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி படை வீரர்களின் தன்னலமற்ற சேவையை போற்றுவோம் என ஆளுநர் பன்வாரிலால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கொடிநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை: கொடிநாளுக்கான நம் பங்களிப்புகள் நம் உணர்வின் அடையாளமாகவும், துணிச்சல் மிகு வீரர்களுக்கு நாம் அளிக்கும் ஆதரவிற்கான சான்றாகவும் அமைகிறது. முப்படை வீரர்கள், முன்னாள் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘டிசம்பர் 7 படைவீரர் கொடி நாளில் படைக்களத்தில் விழுப்புண்களை ஏற்று, தமது இன்னுயிரை ஈந்த எண்ணற்ற படைவீரர்களது தியாகத்தையும், சேவையையும் நாம் மனதார போற்றுகின்ற அதே வேளையில், அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளை நல்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம். அரும்பாடுபட்டு பெற்ற விடுதலையை காப்பாற்றும் பெரும் பணியில் ஈடுபட்ட முப்படை வீரர்களின் குடும்பத்தாரின் நலனைக் காப்பதில் தமிழ்நாடு என்றென்றும் முன்னணியில் திகழ்கின்றது.

இந்த இனிய நாளில், முப்படை வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நமது முப்படை வீரர்களின் தன்னலமற்ற சேவையை போற்றும் வகையிலும், நம் தேச பக்தியை வெளிப்படுத்தும் வகையிலும், கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதியினை வழங்கிட வேண்டும்’ என கூறியுள்ளார்.

Tags : Governor ,soldiers , Appreciate the selfless service of the soldiers: Governor, Chief greet the flag day
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...