×

அலுவலகத்தில் கழிவறை இல்லாத அவலம் செப்டிங் டேங்கில் தவறி விழுந்து அரசு ஊழியர் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரின் இளைய மகள் சரண்யா (24). மாற்றுத் திறனாளியான இவர் காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூர் பகுதியில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் கிடங்கு மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். அலுவலகத்தில் கழிவறை இல்லாத நிலையில் மாற்றுத்திறனாளியான இவர் அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் முறையாக கட்டி முடிக்கப்படாத கழிவறையில் மூலையில் அமைக்கப்பட்ட பத்தடி ஆழம் உள்ள செப்டிக் டேங்கில் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் தவறி விழுந்துள்ளார்.

அலுவலகத்திற்கு நீண்ட நேரமாகியும் திரும்பாததால் அலுவலக ஊழியர்கள் இவரைத் தேடியபோது, சரண்யாவின் காலணி கழிவறை முன்பு இருந்துள்ளது. அங்கு உள்ள செப்டிக் டேங்க்கில் தேடியபோது நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா உயிரிழந்தார். அரசு அலுவலகத்தில் கழிவறை வசதி இல்லாததால் வெளியில் சென்று உயிரிழந்த சரண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி மணிமேகலை பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து  உடலைப் பெற்றுக் கொண்டனர்.

Tags : Government employee killed after failing to septic tank
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4...