×

நெருக்கமாக எடுத்த புகைப்படம் வைரல் தெற்கு ஜார்ஜியாவை மோத வரும் உலகின் பிரமாண்ட பனிப்பாறை: பல இடங்களில் நொறுங்கி விரிசல்

புதுடெல்லி: அண்டார்டிகாவில் இருந்து உடைந்து தெற்கு ஜார்ஜியாவை மோத வரும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறையை மிக அருகாமையில் சென்று இங்கிலாந்து விமானப்படை எடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2017ம் ஆண்டு அண்டார்டிகாவின் லார்சன் சி பனி அடுக்கில் பிளவு ஏற்பட்டது. இதிலிருந்து உடைந்த 4,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட பனிப்பாறைக்கு, ‘ஏ68ஏ’ என பெயரிடப்பட்டது. இதுதான், உலகின் மிகப்பெரிய பனிப்பாறை. இந்த பனிப்பாறையின் செயற்கைகோள் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் பனிப்பாறையின் விளிம்பு பகுதிகளில் விரிசல்கள் இருப்பது தெரிந்தது.

இந்நிலையில், இங்கிலாந்தின் விமானப்படை ராயல் ஏர்போர்ஸ் (ஆர்ஏஎப்) மிகத் தாழ்வாக பறந்து பனிப்பாறையை மிக நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளது. இதில், பனிப்பாறையின் பல விளம்பு இடங்களில் நொறுங்கி கிடப்பது தெளிவாக தெரிகிறது. மேலும் விரிசல்களும், அடிப்பகுதியில் சுரங்கம் போன்ற பெரிய ஓட்டைகளும் தென்படுகின்றன. தெற்கு ஜார்ஜியாவின் பிரிட்டிஷ் ஓவர்சீஸ் பிராந்திய தீவிலிருந்து வெறும் 200 கிமீ தூரத்தில் இப்பனிப்பாறை தற்போது உள்ளது. கடந்த 3 ஆண்டில் இது 1,050 கிமீ தூரம் நகர்ந்து வந்துள்ளது. இதனால், விரைவில் இது தெற்கு ஜார்ஜியாவை மோதும் என கணிக்கப்படும் நிலையில், பனிப்பாறை பல பிரிவாக நொறுங்கும் வாய்ப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

Tags : Places , Close-up photo: World's largest glacier to hit southern Georgia: cracks in many places
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்