வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸ் தோல்வி

ஹாமில்டன்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 134 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. செடான் பார்க் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச, நியூசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் வெறும் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (64 ஓவர்). 381 ரன் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 3ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்திருந்தது. பிளாக்வுட் 80 ரன், ஜோசப் 59 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஜோசப் 86 ரன் எடுத்து (125 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) ஜேமிசன் பந்துவீச்சில் சான்ட்னர் வசம் பிடிபட்டார்.

பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 155 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. பிளாக்வுட் 104 ரன் (141 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி, வேக்னர் பந்துவீச்சில் சவுத்தீ வசம் பிடிபட... வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் முடிவுக்கு வந்தது. கேப்ரியல் டக் அவுட்டானார். ஷேன் டோரிச் காயம் காரணமாக பேட் செய்யவில்லை. வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 247 ரன் எடுத்து (58.5 ஓவர்), இன்னிங்ஸ் மற்றும் 134 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நியூசி. பந்துவீச்சில் வேக்னர் 4, ஜேமிசன் 2, சவுத்தீ, போல்ட், டேரில் மிட்செல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் இரட்டை சதம் விளாசிய நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் வெலிங்டனில் வரும் 11ம் தேதி தொடங்குகிறது.

Related Stories:

>