×

நடராஜன் மீண்டும் மீண்டும் அசத்தல் டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா: ஹர்திக் ஆட்ட நாயகன்

சிட்னி: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா, 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் ஜடேஜா, ஷமி, பாண்டேவுக்கு பதிலாக சாஹல், ஷர்துல், ஷ்ரேயாஸ் இடம் பெற்றனர். ஆரோன் பிஞ்ச் காயம் அடைந்துள்ளதால், ஆஸி. அணி விக்கெட் கீப்பர் மேத்யூ வேடு தலைமையில் களமிறங்கியது. அந்த அணியில் டேனியல் சாம்ஸ் (28 வயது) அறிமுகமானார்.

வேடு, ஷார்ட் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஷார்ட் 9 ரன் எடுத்து நடராஜன் வேகத்தில் ஷ்ரேயாஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி 25 பந்தில் அரை சதம் அடித்த வேடு 58 ரன் எடுத்த நிலையில் (32 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) ரன் அவுட்டானார். அடுத்து ஸ்மித் - மேக்ஸ்வெல் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்து மிரட்டினர். மேக்ஸ்வெல் 22 ரன் (13 பந்து, 2 சிக்சர்) விளாசி தாகூர் வேகத்தில் சுந்தர் வசம் பிடிபட்டார். ஸ்மித் 46 ரன் (38 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து சாஹல் சுழலில் ஹர்திக்கிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்ப, ஹென்ரிக்ஸ் 26 ரன் எடுத்து நடராஜன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் பிடிபட்டார். ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது.

ஸ்டாய்னிஸ் 16 ரன், சாம்ஸ் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் யார்க்கர் ஸ்பெஷலிஸ் நடராஜன் 4 ஓவரில் 20 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தாகூர், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 195 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ராகுல், தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 5.1 ஓவரில் 56 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது. ராகுல் 30 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி டை பந்துவீச்சில் ஸ்வெப்சனிடம் பிடிபட்டார்.

அடுத்து தவானுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். 34 பந்தில் அரை சதம் அடித்த தவான், 52 ரன் எடுத்து (36 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். சஞ்சு சாம்சன் 15 ரன், கோஹ்லி 40 ரன் (24 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 16.1 ஓவரில் 149 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து நெருக்கடியை சந்தித்தது. 23 பந்தில் 46 ரன் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்டியா - ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்து வெற்றிக்காகப் போராடினர். சாம்ஸ் வீசிய கடைசி ஓவரில் 14 ரன் தேவைப்பட்ட நிலையில், 2வது மற்றும் 4வது பந்துகளை இமாலய சிக்சர்களாகத் தூக்கிய ஹர்திக் வெற்றியை வசப்படுத்தினார். இந்தியா 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்து வென்றது. ஹர்திக் 42 ரன் (22 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஷ்ரேயாஸ் 12 ரன்னுடன் (5 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹர்திக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்திய நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நாளை பிற்பகல் 1.40க்கு தொடங்குகிறது.

Tags : Natarajan ,series ,T20I ,India ,Hardik Man of the Match , Natarajan wins T20I series again India: Hardik Man of the Match
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை