×

வேளாண் சட்டத்தில் நிறைய சிக்கல்கள் உள்ளன: பொன்னுசாமி, ஓய்வுபெற்ற வேளாண்மை துறை கூடுதல் இயக்குனர்(ஆராய்ச்சி)

வேளாண் சட்டத்தில் வருங்காலத்தையும், நிகழ்காலத்தையும் சேர்த்துள்ளனர். தொழிற்சாலைகளுக்கு மட்டுமே வியாபார யுக்திகள் தெரியும். உதாரணமாக, கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் சோழவந்தானில் ஒரு விவசாயியிடம் 2 லட்சம் தேங்காய் தேங்கிவிட்டது. வாகனங்கள் இயக்க முடியாத நிலையில் அதை என்ன செய்வதென்று அவர்களால் தெரியவில்லை. இதுகுறித்து அவர் என்னிடம் தெரிவித்தார். தேசிய விவசாய கூட்டமைப்பு (நேஷனல் அக்ரிகல்சுரல் பெடரேஷன்) என்ற ஒன்று உள்ளது அவர்களை தொடர்புகொள்ளக் கூறினேன். அந்த கூட்டமைப்பில் உள்ளவர்கள் குஜராத்தில் தேங்காயை இறக்குமதி செய்ய ஆலோசனை வழங்கினர்.

ஆனால், கொண்டுசெல்லும் வழியில் 10 இடங்களில் அனுமதி வாங்கி, 22 லாரிகளில் மாறி மாறி கொண்டுபோய் அந்த தேங்காயை விற்றுவிட்டு வந்தார். வரும்போது அங்கிருந்து தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். விவசாயிகளுக்கு விற்பனை செய்ய ஏதுவான அந்த கூட்டமைப்பு பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?  இதுதான் நிகழ்காலத்தில் உள்ள பிரச்னை. விவசாயிகள் வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது மொழி தெரிந்திருக்க வேண்டும். அரசியல் தெரிந்திருக்க வேண்டும். இது தெரியாதபட்சத்தில் அவர்கள் தடுமாறுவார்கள். ஆனால், பிரதமர் மேலோட்டமாக அறிவித்துவிட்டார்.

இடைத்தரகர்கள் மூலமாகவே பொருட்களை விற்கவும், வாங்கவும் முடியும். இடைத்தரகர்கள் இல்லாமல் வியாபாரத்தை நடத்தமுடியாது. இந்த சூழலில் நேரடியாக சென்று விவசாயிகள் எப்படி விளைபொருட்களை விற்பனை செய்ய முடியும்.
வேளாண் சட்டங்களின்படி யாரிடம் எவ்வளவு விளைபொருட்கள் இருப்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியாது. வெங்காயம் முதலில் இல்லை என்று கூறினார்கள். பின்னர், இருக்கிறது என்றார்கள். தற்போது ஏற்றுமதி செய்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகள் தான் இந்த சட்டத்தின் மூலம் ஏற்படும். விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு வங்கிகளில் கடன் கொடுப்பது இல்லை. ஆனால், ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு வங்கியில் கடன் கொடுக்கிறார்கள். நிலம் ஒன்றாக இருந்தாலும் அது வேறாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பாமாயில் உற்பத்தியாகும்போது அரசு ஏன் வெளிநாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்கிறது? அரசே இங்கு உள்ள விவசாயிகளிடம் இருந்து பொருட்களை வாங்காமல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் போது விவசாயிகளை மட்டும் சட்டத்தால் கட்டுப்படுத்துவது நியாயமற்றது. எனவே, இந்த சட்டங்களில் யார், யார் அங்கீகரிக்கப்பட்டவர், எவ்வளவு இருப்பு வைத்திருக்கிறார், மொத்தவியாபாரிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள், குறிப்பிட்ட பகுதியில் பொருட்களை வாங்கும் வியாபாரி நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட குறைந்தவிலைக்கு பொருட்களை வாங்கினால் அவர்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் போன்றவற்றை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

எனவே, விவசாயிகள் போராட்டம் என்பது தற்போது உள்ள சூழலில் ஆதரவு தெரிவிக்ககூடியதாகவே உள்ளது. விவசாயிகளுக்கு முதலில் அடிப்படை தேவையே பூர்த்தியாகவில்லை. அப்படி இருக்கும்போது சட்டத்தை மட்டும் நிறைவேற்றுவது ஏன் என்று தெரியவில்லை. விவசாயத்தில் கொள்கையே இல்லாமல் சட்டத்தை இயற்றக்கூடாது. இதுபோன்று நிறைய சிக்கல்கள் உள்ளது. இந்த சட்டத்தில் சொல்லப்பட்ட ஷரத்துகள் உண்மையிலேயே விவசாயிக்கு பயன்தர வேண்டும் என்றால் அதில் ஈடுபடக்கூடிய விவசாயிகளுக்கான் செயல்பாடுகள் வரைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அரசின் கொள்கை முடிவு என்ன என்பதை விளக்க வேண்டும். விவசாயி இந்தியா முழுவதும் பயணம் செய்ய முடியும் என்றால் அதற்கான பாதுகாப்பை யார் கொடுப்பது ஆகியவற்றை அரசு தெரிவிக்க வேண்டும். வேளாண் சட்டங்களின்படி யாரிடம் எவ்வளவு  விளைபொருட்கள் இருப்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியாது. வெங்காயம் முதலில் இல்லை என்று கூறினார்கள். பின்னர், இருக்கிறது என்றார்கள். தற்போது ஏற்றுமதி செய்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகள் தான் இந்த சட்டத்தின் மூலம்  ஏற்படும்.

* அதிகாரத்தின் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது: தெய்வசிகாமணி, மாநில தலைவர், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் மூன்றையும் மசோதா வடிவத்தில் இருந்தபோதே இந்தியாவில் உள்ள விவசாயிகள் எதிர்த்தார்கள். பாஜவிற்கு ஆதரவான விவசாய சங்கங்கள் மட்டுமே இதை வரவேற்றார்கள். ஒரு கட்சியின் விவசாய அணியை பொதுவான விவசாய சங்கமாக எடுத்துக்கொள்ள முடியாது. கட்சி சார்பற்ற விவசாய சங்கங்கள் இந்த மசோதாக்களை வேண்டாம் என்றே சொன்னார்கள். பின்னர், சட்டமாக்கும்போது எதிர்த்தார்கள். ஆனால், மத்திய அரசு இதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், சட்டமாக அமல்படுத்தும்போது தான் பிரச்னை பெரியதாக ஆகியது.

பஞ்சாப்பில் அகாலி தளம் -பாஜவும் கூட்டணி. அகாலி தளம், இந்த சட்டம் தவறு என்று கூறியபோதே இந்த சட்டத்தை மாற்றியிருக்க வேண்டும். சட்டத்தை அமல்படுத்தியதால், அவர்கள் கூட்டணியை விட்டே சென்றுவிட்டார்கள். எதிர்ப்பு தெரிவித்தால் அதை பாஜ ஏற்றுக்கொள்வது இல்லை. பெரும்பான்மை இருக்கிறது என்கிற ஒற்றை காரணத்திற்காக, விவசாயிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு சட்டத்தை அமல்படுத்தியது சரியானது அல்ல. இதுதான், தற்போது டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு போராட காரணமாகியது. ஆளும் கட்சி, எதிர்கட்சி என அனைத்து தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வந்தபோதும் கூட, அவர்களை அழைத்துப்பேச மத்திய அரசு மறுக்கிறது.

ஊருக்கே சோறு போடும் விவசாயியின் கருத்தைக்கேட்க மத்திய அரசு சுணக்கம் காட்டுகிறது. மொத்த மக்கள் தொகையில் 62 சதவீதம் பேர் விவசாயிகள். அவர்கள் சம்பந்தமான விஷயங்களில், அவர்களின் கருத்தையும், ஆலோசனையையும் கேட்காமல் விருப்பத்திற்கு மாறாக அதிகாரத்தின் பேரில் சட்டம் இயற்றியது நியாயமில்லை. டெல்லி குளிரில் 10 நாட்களுக்கும் மேலாக போராடும் விவசாயிகள் மீது குளிர்ந்த தண்ணீரை பீய்ச்சி அடிப்பதும், உணவு கிடைக்க விடாமல் சாலையை முடக்குவதும் என்பது அதிகாரத்தின் உச்சம். விவசாய சட்டத்தை ரத்து செய்யவில்லை என்றால் டெல்லியை விட்டு செல்லமாட்டோம் என்று விவசாயிகள் அறிவித்த பிறகாவது மத்திய அரசு இறங்கிவர வேண்டும். குறைபாடுகளை எல்லாம் களைந்து தீர்க்க வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தை கனடா பிரதமரும் ஆதரித்துள்ளார். அந்த அளவிற்கு விவசாயிகளின் உண்மை நிலை உலக நாடுகளுக்கு புரிகிறது.

கைது செய்வதன் மூலமாகவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் என்று நினைப்பது தவறு. அடக்கு முறை என்பது தற்போது தற்காலிக தீர்வாக இருந்தாலும் அது நிரந்தர தீர்வு கிடையாது என்பதை மத்திய அரசு உணர வேண்டும். வாக்கு என்கிற மிகப்பெரிய ஆயுதம் எங்களிடம் உள்ளது. கோரிக்கை நிறைவேறும் வரை டெல்லியில் இந்த போராட்டம் தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். டெல்லியில் நேரடியாக சென்று ஆதரவு தெரிவிக்க தமிழக விவசாயிகளுக்கு பொருளாதாரம் இல்லை என்றாலும் தமிழகத்தில் இருந்து அவர்களுக்கு எங்களின் போராட்டங்கள் மூலமாக ஆதரவு தெரிவிப்போம்.

மக்கள் தன்னெழுச்சியாக போராடும் போது எதிர்கட்சி தூண்டுதலின் பேரில் தான் போராட்டம் நடைபெறுகிறது என்று ஆளும் கட்சி பொய் குற்றச்சாட்டு கூறுவது இயல்பு தான். 10 நாளுக்கும் மேலாக இந்த போராட்டம் தொடர்கிறது என்றால் அது தன்னெழுச்சி போராட்டம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். கைது செய்வதன் மூலமாகவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று நினைப்பது தவறு. அடக்குமுறை நிரந்தர தீர்வு கிடையாது என்பதை மத்திய அரசு உணர வேண்டும். வாக்கு என்கிற மிகப்பெரிய  ஆயுதம் மக்களிடம் உள்ளது.


Tags : Ponnusamy ,Director of Agriculture , There are a lot of issues in agriculture law: Ponnusamy, Retired Additional Director, Department of Agriculture (Research)
× RELATED டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண,...