கடலூரில் வடியாத வெள்ளம்; தீவுகளாக காட்சியளிக்கும் கிராமங்கள்

கடலூர்: புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழைக்காரணமாக கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், சேத்தியாத்தோப்பு, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பண்ருட்டி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் பகுதியில் கடந்த 3ம் தேதி ஒரே நாளில் 34 செ. மீட்டர் பெய்த மழையால் நகரமே வெள்ள காடாக காட்சியளிக்கின்றது. வீராணம் ஏரியில் இருந்து பாதுகாப்பு கருதி சுமார் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் திருநாரையூர், சிறகிழந்தநல்லூர், கீழவன்னியூர், நடுத்திட்டு, நந்திமங்கலம், பிள்ளையார்தாங்கல் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கொள்ளிடத்தில் அதிக அளவு வெள்ளம் செல்வதால் அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், திட்டுக்காட்டூர், மேலகுண்டவாடி உட்பட 10 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

பெருமாள் ஏரியில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பால் ஆடூர்அகரம், பூவாணிகுப்பம், தீர்த்தனகிரி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களும், என்எல்சி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கொளக்குடி, கல்குணம், மதுவானைமேடு, கரிவெட்டி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களும், மாவட்டம் முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அவை தீவுகள் போல காட்சி அளிக்கின்றன.தற்பொழுது நேற்று காலை முதல் மழை குறைந்துள்ளதால் பெருமாள் ஏரி, வீராணம் ஆகியவற்றில் இருந்து தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொளக்குடி, குறிஞ்சிப்பாடி, குமராட்சி, சர்வராஜன்பேட்டை உட்பட 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் சுமார் 1 லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது. கொளக்குடி, கல்குணம், ஒணான்குப்பம், ஆடூர்அகரம் உட்பட பல கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கன மழைக் காரணமாக சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் மழை சற்று குறைந்துள்ளது, ஆனாலும் இன்னமும் வெள்ளம் வடியவில்லை. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ள பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டாலும் போதிய இட வசதி இல்லாததால் இரவில் தூங்க முடியாமலும், அடிப்படை தேவைகளுக்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories:

>