தொடர்மழையால் தரைப்பாலங்கள் சேதம்: பழநியில் தீவுகளாக மாறிய கிராமங்கள்

பழநி, டிச. 6: தொடர் மழையின் காரணமாக பழநி பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் சேதமடைந்திருப்பதால் பல கிராமங்கள் தீவுகளாக மாறி விட்டன.பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இவைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் தாழ்வான பகுதிகள் வெள்ளநீர் புகுந்து வருகிறது. பழநி அருகே பெரியம்மாபட்டி ஊராட்சிக்குட்பட்ட சண்முகம்பாறை பகுதியில் சுள்ளிக்காத்து ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

தற்காலிகமாக இந்த ஓடையின் குறுக்கே மணல் மூட்டைகள் மற்றும் குழாய்களை பதித்து தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.தொடர் மழையின் காரணமாக சுள்ளிக்காட்டு ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தரைப்பாலத்திற்காக போடப்பட்டிருந்த மணல் மூட்டைகள் மற்றும் குழாய்கள் வெள்ளநீரால் அடித்து செல்லப்பட்டு விட்டன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து முடங்கி சண்முகம்பாறை கிராமம் தனித்தீவாக மாறிவிட்டன.

இதுபோல் குதிரையாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பூஞ்சோலை கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் இடுப்பளவு நீரில் இறங்கி ஆற்றை கடந்து செல்லும் சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளனர்.அணைகள் நிரம்பி விட்டதால் கரையோர கிராமங்களான பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, கொழுமம், சங்கரராமநல்லூர் உள்ளிட்ட கிராமங்களுக்கும், சண்முகாநதி கரையோர கிராமங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>