×

நாகர்கோவில் வலம்புரிவிளை உரக்கிடங்கில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை: பயோமைனிங் முறையில் பிரிக்கும் பணி முடிவது எப்போது

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 52 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியின் மக்கள் தொகை பெருக்கத்தால், சாலையில் சேரும் குப்பையின் அளவும் பெருகி வந்தது. இந்த சாலை ஓரத்தில் வீசப்படும் குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வலம்புரிவிளை உரக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் தினமும் சுமார் 110 டன் குப்பை வலம்புரிவிளை உரக்கிடங்கில் குவிந்து வந்தது. இதனால் வலம்புரிவிளை உரக்கிடங்கு குப்பை மலைபோல் காட்சி அளிக்கிறது. இதை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் தரப்பிலும், அரசியல் கட்சியினர் சார்பிலும் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. வலம்புரிவிளை உரக்கிடங்கிற்கு குப்பைகள் கொண்டு செல்வதற்கு என்று மாநகராட்சி அலுவலகத்தில் லாரிகள் மற்றும் டெம்போக்கள் இயக்கப்பட்டு வந்தன. மேலும் நாகர்கோவில் மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஒவ்வொரு வார்டு பகுதியிலும் ஒரு இடத்தில் கொட்டப்பட்டு, அதிக அளவு சேர்ந்தவுடன் அங்கிருந்து வலம்புரிவிளை உரக்கிடங்கிற்கு வாகனங்களில் எடுத்துசெல்லப்பட்டு கொட்டப்பட்டது.

இதனால் சாலையோரம் குவித்து வைக்கப்படும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவது வாடிக்ைகயாக இருந்து வந்தது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். வலம்புரிவிளை உரக்கிடங்கில் அவ்வப்போது தீ விபத்தும் ஏற்பட்டு வருகிறது. தீ விபத்தின்போது அங்கிருந்து வெளிவரும் புகையால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குப்பை கிடங்கை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது. வலம்புரிவிளை உரக்கிடங்கை மாற்றக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வந்ததை தொடர்ந்து அங்குள்ள குப்பைகளை மருங்கூர் பகுதியில் கைவிடப்பட்ட கல்குவாரி பள்ளத்தில் கொட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் அங்கு கொட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக எடுககப்பட்ட சட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்தன. அடுத்தப்படியாக மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை வலம்புரிவிளை உரக்கிடங்கிற்கு கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்த்து, அதற்கு மாற்று வழி செய்வது என மாநகராட்சி முடிவு செய்தது.

அதன்படி மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த பகுதிலேயே உரம் தயாரிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக மாநகர பகுதியில் வடசேரி பஸ் நிலையம் அருகே, அனாதைமடம் மைதானம், புத்தேரி தகனமேடை அருகே, வலம்புரிவிளை உரகிடங்கு உள்பட 11 இடங்களில் நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. நுண்ணுயிர் உரக்கிடங்கிற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணியை தொடங்கியபோது பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் தற்போது 11 இடங்களில் இந்த நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியே வரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என தரம் பிரித்து, குப்பைகள் சேகரிக்கவரும் தூய்மை  பணியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டும். அவர்கள் மக்கும் குப்பைகளை
இந்த நுண்ணுயிர் உரக்கிடங்கிற்கு கொண்டு சென்று உரமாக்குகின்றனர். இதற்கான நுண்ணுயிர் உரக்கிடங்கிலும் தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நுண்ணுயிர் உரக்கிடங்கில் குப்பை உரமாக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாநகராட்சி விற்பனை செய்கிறது. இதன் மூலம் கிடைக்கும் பணம் நுண்ணுயிர் உரக்கிடங்கில் வேலைபார்க்கும் பணியாளர்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. இதனால் தற்போது வலம்புரிவிளை உரக்கிடங்கிற்கு குப்பைகள் செல்வது தடைபட்டுள்ளது. இதனால் மாநகர பகுதியில் முன்புபோல் குப்பைகள் தேங்குவது குறைந்துள்ளது.

வலம்புரிவிளை உரக்கிடங்கில் மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை பயோமைனிங் முறையில் மாற்ற மாநகராட்சி முடிவு செய்து, இதற்காக ரூ.10 கோடியே 7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றும் பணியை ஒரு தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. வலம்புரிவிளை உரக்கிடங்கில் 1 லட்சத்து 53 ஆயிரம் கியூபிக் மீட்டர் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. பயோமைனிங் முறையில் அனைத்து குப்பைகளையும் தரம் பிரித்து அகற்றி, அந்த இடத்தை குப்பை இல்லாத தனி மைதானமாக அந்த நிறுவனம், மாநகராட்சிக்கு திரும்ப ஒப்படைக்கவேண்டும். தற்போது வலம்புரிவிளை உரக்கிடங்கில் உள்ள குப்பைகள் பயோமைனிங் முறையில் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதற்கான குப்பைகளை பிரிக்கும் எந்திரங்கள் வலம்புரிவிளை உரக்கிடங்கிற்கு கொண்டுவரப்பட்டு, குப்பைகளை பிரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணி விரைந்து முடிக்க பொதுமக்கள்  தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.  

கிடப்பில் போடப்பட்ட மின் உற்பத்தி
  வலம்புரிவிளை உரக்கிடங்கில் கடந்த சில வருடத்திற்கு முன்பு ரூ.1 கோடி  மதிப்பீட்டில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. காய்கறி கழிவு  மற்றும் ஓட்டல் கழிவுகள் மூலம் மீத்தேன் எரிவாயு உற்பத்தி செய்து அதனை  பயன்படுத்தி தினசரி 40 கிலோவாட் வரை மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது.  இதன்படி மின்உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடைபெற்றது.  பின்னர் அங்கிருந்து மின்சாரம் தயார் செய்யப்பட்டது. உரக்கிடங்கில் உள்ள 5  உயர் மின்கோபுர விளக்குகள் மற்றும் உரக்கிடங்கில் உள்ள இயந்திரங்கள்  பயன்பாட்டிற்கு இந்த மின்சாரம் எடுக்கப்பட்டது. அங்கு 40 கிலோவாட்  மின்சாரம் தயாரிக்கும் வகையில் உள்கட்டமைப்பு செய்யப்பட்டிருந்தாலும்,  முதல் கட்டமாக 15 கிலோவாட் உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னர் இந்த  திட்டத்தை மாநகராட்சி கைவிட்டது.
தினமும் 1200 டன் குப்பைகள் பிரிப்பு வலம்புரிவிளை உரக்கிடங்கில் தேங்கி கிடக்கும் குப்பைகள் பயோமைனிங் முறையில் அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

இதற்காக குப்பைகளை பிரிக்கும் 2 இயந்திரங்கள் வலம்புரிவிளை உரக்கிடங்கிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் 2 இயந்திரங்கள் வரவுள்ளது. ஒரு இயந்திரம் ஒரு நாளைக்கு 300 டன் குப்பைகளை பிரித்து எடுக்கும். அந்த வகையில் 4 இயந்திரங்களும் சேர்த்து தினமும் 1200 டன் குப்பைகளை பிரிக்கும். தற்போது ஒரு இயந்திரம் மூலம் குப்பைகள் பிரிக்கப்பட்டு வருகிறது. இதில் பிளாஸ்டிக், டயர்கள், மரப்பொருட்கள் உள்பட குப்பையில் உள்ள அனைத்து பொருட்களும் தனிதனியாக பிரிக்கப்பட்டு, மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மறுசுழற்சிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தனியார் கம்பெனி மூலம் நடந்து வரும் இந்த பணிகளை ஒரு வருடத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.6 லட்சத்திற்கு உரம்விற்பனை
மாநகர பகுதியில் உள்ள 11 நுண்ணுயிர் உரகிடங்கிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் உரத்தை பொதுமக்கள் அதிக அளவு வந்து வாங்கி செல்கின்றனர். மேலும் தோட்டக்கலைத்துறைக்கும் மாநகராட்சி உரம் விற்பனை செய்து வருகிறது. இதுவரை சுமார் ரூ.6 லட்சத்திற்கு உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து கிடைத்த இந்த பணம் அனைத்தையும் குப்பைகள் சேரிக்கும் தூய்மைபணியாளர்கள் மற்றும் நுண்ணுயிர் உரக்கிடங்குகளில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் பிரித்து வழங்கியுள்ளது.

35 வருடமாக மாற்ற கோரி போராட்டம்
இது குறித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: நாகர்கோவில் மாநகர பகுதியின் மத்தியில் வலம்புரிவிளை உரக்கிடங்கு அமைந்துள்ளது. மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பையால் துர்நாற்றம் வீசி வருகிறது. உரக்கிடங்கால் பீச்ரோடு, இருளப்பபுரம், வட்டவிளை, பெரியவிளை, தட்டான்விளை, வைத்தியநாதபுரம், வல்லன்குமாரன்விளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த உரக்கிடங்கால் நோய்தொற்றும் ஏற்பட்டுவருகிறது.  வலம்புரிவிளை உரக்கிடங்கை அப்புறப்படுத்த கோரி அரசியல் கட்சிகள், பல அமைப்புகள் தொடர்ந்து 35 வருடகாலமாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.

போராட்டங்கள் நடத்தும்போது உரக்கிடங்கை அப்புறப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி கூறி வந்தது. ஆனால் உரக்கிடங்கை அப்புறப்படுத்துவதில் மாநகராட்சி தோல்வி அடைந்துள்ளது. வலம்புரிவிளைஉரக்கிடங்கு குப்பைகள் அகற்றுவது தொடர்பாக தொலைநோக்கு பார்வையில்லாமல் பல திட்டங்களை நிறைவேற்றி அது தோல்வியில் முடிந்துள்ளது. மாநகர பகுதி மக்களின் பணம் விரையம் ஆக்கப்பட்டு வருகிறது. வலம்புரிவிளை உரக்கிடங்கில் உள்ள குப்பைகள் விரைவில் அகற்றப்படவில்லை என்றால் காங்கிரஸ் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags : mountain ,landfill ,Nagercoil ,Valampurivilai , Garbage piled up like a mountain at Valampurivilai landfill in Nagercoil: When will the biomining process be completed?
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...