கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் மண்சரிவால் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் சவரிக்காடு அருகே மண் சரிவால், 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புரெவி புயலால் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வத்தலக்குண்டு, பழநி செல்லும் சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மழை குறைந்ததால், நேற்று முன்தினம் போக்குவரத்து தொடங்கியது. கடந்த 2 நாட்களுக்கு முன், பழநி மலைச்சாலையில் கோம்பைக்காடை அடுத்த புல்லாவெளி அருகே மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர்.

நேற்று முன்தினம் இரவு பழநி பிரதான சாலையில் சவரிக்காடு பகுதியில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். இதனால் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழைக்காலங்களில் மண், பாறை சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பது வாடிக்கையாகி விட்டது. எனவே, சாலையை அகலப்படுத்தி மண் சரிவு ஏற்படாத வண்ணம் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>