×

ரூ.2 கோடியில் பயன்தராத திட்டம் திறந்தும் பலனின்றி கிடக்குது தக்காளி பதப்படுத்தும் குடோன்

* டன் கணக்கில் வீணாகும் அவலம்
* பயன் தரவில்லை பலநாள் உழைப்பு

மேச்சேரி: மேச்சேரியில் கட்டியுள்ள தக்காளி குளிர்பதன கிடங்கு திறந்தும் பலனின்றி கிடப்பதால் டன் கணக்கில் பழம் வீணாகும் அவலம் தொடர்கிறது. இதனால் பலநாள் உழைப்பு பயன்தராமல் போகிறது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில், ஒன்பது தாலுகாவிலும் ஆண்டுதோறும் சராசரியாக, 4,170 ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம், 54,202 மெட்ரிக் டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், மேட்டூர் தாலுகா, மேச்சேரி வட்டாரத்தில் மட்டும், 2,320 ஹெக்டேரில், 29,804 டன் தக்காளி உற்பத்தியாகிறது. உற்பத்தி அதிகரித்து, விலை வீழ்ச்சியடையும் சமயத்தில் தக்காளியை சேமித்து வைத்து, விலை அதிகரிக்கும் சமயத்தில் விற்பனை செய்ய மேச்சேரியில் தக்காளி குளிர்பதன கிடங்கும் கட்ட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இப்படி விவசாயிகள் வைத்து வந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 2009-10ல், தி.மு.க., ஆட்சி காலத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், ₹2 கோடி 100 டன் தக்காளி கொள்ளளவு கொண்ட தக்காளி குளிர்பதன கிடங்கு கட்டப்பட்டது. விவசாயிகள் ஒரு கூடை தக்காளியை குளிர்பதன கிடங்கில் வைக்க நாள் ஒன்றுக்கு, 50 காசு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், குளிர்பதன கிடங்கு வந்த பின், விவசாயிகள் தக்காளியை சேமித்து வைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஒரு கட்டத்தில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. அந்த நேரத்தில் தக்காளி பயிரிடுவதை விவசாயிகள் அறவே தவிர்த்தனர். இதனால் குளிர்பதன கிடங்குக்கு தக்காளி வருவது அறவே குறைந்து போனது. ஆனால் குளிர்பதன கிடங்கை மேச்சேரியில் ஒதுக்குபுறமான இடத்தில் கட்டியதும், கிடங்குக்கு செல்லும் சாலை, லாரி, வேன் செல்ல முடியாத அளவுக்கு குறுகலாக இருப்பதுமே, வெறிச்சோடி கிடப்பதற்கு காரணம் என்று கூறும் விவசாயிகள்,  இதனால் தங்களின் பலநாள் உழைப்பு பலனின்றி போகிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஏற்கனவே இருக்கும் 100 டன் கொள்ளளவு கொண்ட குளிர் பதன கிடங்கையே விவசாயிகள் பயன்படுத்தாத நிலையில், நடப்பு, அ.தி.மு.க., ஆட்சியில் ஒதுக்கீடு செய்த, இரு குளிர்பதன கிடங்குகளில் ஒன்றை, மேச்சேரி குளிர் பதன கிடங்கு அருகிலேயே கட்டுவது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேச்சேரி தக்காளி குளிர்பதன கிடங்குக்கு  அருகில் தற்போது நபார்டு வங்கி நிதி உதவியோடு, 25 டன் கொள்ளளவு கொண்ட மற்றொரு புதிய குளிர்பதன கிடங்கு கட்டப்பட்டுள்ளது. விரைவில் குளிர்பதன கிடங்கு திறப்பு விழா நடத்தப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. மேட்டூர் தாலுகா, கொளத்தூர், நங்கவள்ளி பகுதியிலும் அதிக அளவில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. எனவே, புதிய குளிர்சாதன கிடங்கினை நங்கவள்ளி அல்லது கொளத்தூரில் கட்டி இருந்தால் அப்பகுதி விவசாயிகள் பலன் அடைவர். மாறாக மேச்சேரியில் ஏற்கனவே, கட்டிய குளிர்சாதன கிடங்கை விவசாயிகள் பயன்படுத்தாத நிலையில், அதே வளாகத்தில் மீண்டும் ஒரு குளிர்சாதன கிடங்கு கட்டுவது நங்கவள்ளி, கொளத்தூர் விவசாயிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேச்சேரி குளிர்சாதன கிடங்குக்கு மின் கட்டணம் செலுத்தும் வகையில் மட்டும் மாதம், 25,000 ரூபாய் இழப்பு ஏற்படும் நிலையில், புதிய குடோன் திறக்கும் பட்சத்தில், அதற்கான மின் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இதனால், கூடுதல் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள், கிடங்கை செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை. இதனால் தற்போது இரண்டு குடோன்கள் இருந்தும் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்ற நிலையே தொடரும் என்பதும் விவசாயிகள் குமுறலாக உள்ளது.

போதிய விழிப்புணர்வு இல்லாததால் முடக்கம்
‘‘தக்காளி சீசன்நேரத்தில் மட்டும், 50 டன் வரை சேமிக்கப்படுகிறது. குடோனில் காய்கறி சேமித்தாலும், சேமிக்காவிட்டாலும் கிடங்கு குளிர்ச்சியாக இருக்க ஏசியை போட்டே ஆக வேண்டும். இதனால் பிற மாதங்களில் மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்யும் ஆப்பிள், மாம்பழம், புளி போன்றவை குடோனில் இருப்பு வைக்கப்படுகிறது. காய்கறி, பழம் இருப்பு வைப்பதன் மூலம் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு சராசரியாக, 5,000 ரூபாய் மட்டுமே வருவாய் கிடைக்கிறது. ஆனால், குடோனுக்கு மாதம்தோறும் மின்கட்டணமாக, 25,000 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. ஆனாலும் இந்த குடோன் குறித்து பெரும்பாலான விவசாயிகளிடம் விழிப்புணர்வு இல்லாதததால் சற்று முடக்கம் ஏற்பட்டுள்து,’’ என்பது அதிகாரிகள் கூறும் தகவல்.

நஷ்டம் என்பதால் பறிக்கவே தயக்கம்
விவசாயி  ராஜ்குமார் கூறுகையில், ‘‘எனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் தக்காளி பயிரிட்டு வருகிறேன். பலமாதங்கள் உழைத்து, விளைவிக்கும் தக்காளிப்பழத்திற்கு போதியவிலை எப்போதும் கிடைப்பதில்லை. நல்ல விலை இல்லாத காரணத்தாலும்,  பறிப்பதற்கான ஆட்கள் பற்றாக்குறையும் எங்கள் ஆர்வத்தை தடுத்து விடுகிறது. மேலும் கூடுதல் விலை கொடுத்து பறிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது. இதனால் நஷ்டம் ஏற்படுவதை விட பறிக்காமல் இருப்பதே மேல் என்று கருதுவேன். இதனால் பல  நேரங்களில் செடியிலேயே பழம் வாடி அழுகி நிற்கிறது. எனவே பழத்தை பறித்து பதப்படுத்துவதற்கான குடோனை, முழுமையாக செயல்படுத்த அரசு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

செலவு கணக்கிட்டால் 3 மடங்கு நஷ்டம் தான்
விவசாய சங்க பிரமுகர் கணேசன் கூறுகையில் ‘‘மேச்சேரியில் அதிகளவில் தக்காளி விளைகிறது. இதனை பறித்துக் கொண்டு, அருகில் செயல்பட்டு வரும் ஓமலூர், மேச்சேரி, தாரமங்கலம், நங்கவள்ளி உள்ளிட்ட  சந்தைகளுக்கு வாகனங்களில் கொண்டு சென்று விற்கிறோம். சாகுபடி செலவுகள், பறிப்பதற்கான கூலி, வாகனங்களுக்கான வாடகை போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்தால் இறுதியில் எங்களுக்கு 3ல் ஒரு பங்குவிலை கூட கிடைப்பதில்லை. இதனால் பலர், விற்பனைக்கு கொண்டு வரும் பழத்தை சாலையோரங்களில்  கொட்டிச் செல்லும் அவலம் தொடர்கிறது. இதை தவிர்க்க, குளிர்பதன மையத்தை சிறப்பாக செயல்படச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

தொழிற்சாலை அமைக்கவேண்டும்
விவசாய ஆர்வலர் தங்கம் கூறுகையில், ‘‘விவசாயிகள் பயிரிடும் தக்காளிப்பழத்தை ஆந்திரா,  கர்நாடகாவிற்கு, புரோக்கர்கள் மூலமாக அதிளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனை நல்ல விலை கிடைக்கும் போது மட்டுமே புரோக்கர்கள் வாங்கிச் செல்கின்றனர். விலை குறையும் சமயத்தில் தக்காளிப்பழத்தை வாங்குவதை தவிர்க்கின்றனர். இதனால் காட்டில் விளையும் தக்காளிப்பழத்தை பறிக்காமல் செடியிலேயே அழுகும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஒரு ஏக்கரில் தக்காளி பயிரிட ₹15 ஆயிரத்திற்கும் மேல் செலவாகிறது. எனவே அதிகளவில் உற்பத்தி செய்யும் நேரங்களில் பழத்தை வீணாக்காத வகையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை  தொடங்கினால் பயனுள்ளதாக இருக்கும்,’’ என்றார்.

Tags : Rs 2 crore, useless scheme, fruitless, tomato, processing coupon
× RELATED தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து...