×

மழையால் செங்கல், எம் சாண்ட் உற்பத்தி பாதிப்பு; தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கட்டுமான பணிகள் நிறுத்தம்: தொழிலாளர்கள் வேலையிழப்பு

சேலம்: தொடர் மழை காரணமாக செங்கல், எம் சாண்ட் உற்பத்தி பாதிப்பால், தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக இன்ஜினியர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் விவசாயம், ஜவுளி உற்பத்திக்கு அடுத்தபடியாக கட்டுமான தொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். கட்டுமான தொழிலில் கூலி தொழிலாளர்கள், மேஸ்திரி, இன்ஜினியர்கள், உதவியாளர்கள் என பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த மார்ச் 20ம் தேதி வரை கட்டுமான தொழிலில் எவ்வித பிரச்னையுமின்றி நல்லபடியாக தொழில் நடந்து வந்தது. கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன்பின் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கட்டுமான தொழில் அனைத்தும் முடங்கி போயின. தொழில் ஸ்தம்பித்ததால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் போதிய வருமானமின்றி தவித்தனர். கடந்த ஜூலையில் இருந்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது. இதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கட்டுமான பணிகள் மீண்டும் செயல்பட தொடங்கியது. கட்டுமான பணி தொடங்கிய பின்பு போதியளவு தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் கடந்த ஜூலை மாதம் கட்டுமான பணிக்கு தேவையான எம் சாண்ட், செங்கல், ஜல்லிகற்கள், சிமெண்ட் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் அப்போது விலையும் அதிகரித்து இருந்துது. இதன் காரணமாக கட்டுமான பணிகள் சரிவர நடக்காமல் போனது.

 இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக எம் சாண்ட், செங்கல், ஜல்லி, சிமெண்ட் உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். இதன் காரணமாக கட்டுமானத்துக்கு தேவையான அனைத்து பொருட்களும் தாரளமாக கிடைத்தது. இதனால் கட்டுமான பணிகள் சுறுசுறுப்பாக நடந்தது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் செங்கல், எம் சாண்ட் உற்பத்தி பாதிக்கபட்டுள்ளது. இதன்காரணமாக ஏற்கனவே தொடங்கப்பட்ட பல கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக இன்ஜினியர்கள் தெரிவித்தனர். இதுபற்றி சேலத்தை சேர்ந்த இன்ஜினியர்கள் கூறியதாவது: மார்ச் மாதம் கொரோனாவுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமான பணிகள் நடந்து வந்தது. ஆனால் கொரோனாவுக்கு பிறகு நூறு சதவீதம் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது.

கடந்த ஜூலை மாதத்தில் 20 சதவீத பணிகள் மட்டுமே நடந்தது. இதன்பின்னர் கடந்த மூன்று மாதமாக கட்டுமான பணிகள் அதிகளவில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அடுத்தடுத்து புயல், தொடர் மழை காரணமாக தமிழகம் முழுவதும் செங்கல் உற்பத்தி 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எம் சாண்ட் 50 சதவீதம் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டுமானத்திற்கு தேவையான செங்கல், எம் சாண்ட் வரத்து குறைவு காரணமாக பல கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இது ஒரு புறமும் இருக்க மழை காரணமாக பல கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இவ்வகையில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறுத்தத்தால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதனால் வேலையிழந்து வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியர்கள் பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

விற்பனை சரிவு
கட்டுமானப்பணி சார்ந்துள்ள இரும்புக்கம்பி, சிமெண்ட், பெயிண்ட், இரும்பு கிரீல், எலக்டிரிக் சாமான்கள், பிவிசி பைப், மரக்கட்டைகள், கதவுக்கு தேவையான தளவாட பொருட்களின் விற்பனையும் தற்போது சரிந்துள்ளது. இதன் காரணமாக பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : construction workers ,Tamil Nadu , Brick, M Sand production affected by rain, construction work halted
× RELATED மின்சாரம் பாய்ந்து தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 தொழிலாளர்கள் பரிதாப பலி