×

கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் போராட்டம் தமிழக வாகனங்கள் செல்ல அனுமதி மறுப்பு: மாநில எல்லையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

கூடலூர்: தமிழக-கர்நாடக எல்லையான கக்கனல்லா சோதனைச் சாவடியில் தமிழக பதிவு எண் கொண்ட  வாகனங்கள் கர்நாடக பகுதிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வடக்கு கர்நாடகாவில் மராட்டிய அமைப்புகளுக்கு கர்நாடக அரசு ரூ.50 கோடி தேர்தல் நிதி வழங்கியதை கண்டித்து, கர்நாடகாவில் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் நேற்று ஒரு நாள் போராட்டம் அறிவித்து இருந்தனர். இதனால், பாதுகாப்பு கருதி கர்நாடக போலீசார் தமிழக வாகனங்களை நேற்று காலை முதல் கர்நாடகாவிற்குள் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக நேற்று காலையில் இருந்து கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக வந்த சரக்கு லாரிகள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் கேரள மாநில பதிவு என் கொண்ட வாகனங்களும் தமிழக-கர்நாடக எல்லையான கக்கனல்லா பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

நீலகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவிற்கு இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் நேற்று இயக்கப்படவில்லை. ஆனால், கர்நாடக அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் வழக்கம் போல் தமிழக பகுதிக்குள் வந்து சென்றன. கர்நாடகாவில் நடைபெறும் போராட்டம் முடிவடைந்ததும், வாகனங்ககள் வழக்கம் போல் அனுமதிக்கப்படும் என இரு மாநில
போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், வாகனங்களில் வந்தவர்கள் பல மணி நேரம் வனப்பகுதியில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது. இதேபோல் தமிழக மாநில எல்லைப் பகுதியான தொரப்பள்ளியில் சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டன. நேற்று மாலை சுமார் 3 மணியளவில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் நேற்று காலை சரக்கு லாரி உள்ளிட்ட வாகனங்கள் கர்நாடக மாநிலம் செல்வதற்கு அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர், சாம்ராஜ் நகர், கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழக அரசு பஸ்கள் காலை முதல் இயக்கப்படவில்லை.
    
 பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக கர்நாடக மாநிலம் செல்வதற்காக வந்த சரக்கு லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி லாரி ஓட்டுநர்களுக்கு கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் பந்த் குறித்து அறிவுறுத்தி திரும்பிச் செல்லுமாறு கூறினர். இதன் காரணமாக பண்ணாரி சோதனை சாவடியில் 500க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் மாலை 3 மணி முதல் வழக்கம்போல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.


Tags : activists ,Kannada ,Karnataka ,Tamil Nadu ,state border , Karnataka, Kannada organizations, protest, Tamil Nadu vehicles, denial of permission
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...