புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு 10ம் தேதி பூமி பூஜை: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

புதுடெல்லி: டெல்லியில் 861.90 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான பூமி பூஜை வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகளை கடந்து விட்டது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இதற்கு மாற்றாக, இதன் அருகிலேயே புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கான டெண்டர் பணிகள், திட்டமிடுதல் போன்றவை போர்க்கால வேகத்தில் நடந்தன.  நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு மக்களளவை சபாநாயகரே பொறுப்பாளர் என்பதால், புதிய கட்டிடப் பணிகளை சபாநாயகர் ஓம் பிர்லா கவனித்து வருகிறார். பூமி பூஜை விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துவரும் அவர், நேற்று பிற்பகல் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

அப்போது, இதன் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும்படி முறைப்படி அழைப்பு விடுத்தார். பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, வரும் டிசம்பர் 10ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறுவதாக அறிவித்துள்ளார் சபாநாயகர்.

இது குறித்து ஓம் பிர்லா அளித்த பேட்டி வருமாறு: ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட தற்போதைய நாடாளுமன்றம் 100 ஆண்டுகளை நெருங்குகிறது. எனவே, புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. பிரதமர் மோடியின் ஆத்மநிர்பார் திட்டத்தின் அடிப்படையில் இந்திய அரசுக்கான நாடாளுமன்றத்தை இந்தியர்களே கட்ட உள்ளனர் என்பது பெருமை கொள்ளத்தக்கது. இந்த கட்டிடப் பணியில் 2 ஆயிரம் இந்தியர்கள் நேரடியாகவும், 9 ஆயிரம் இந்தியர்கள் மறைமுகமாகவும் பங்கேற்கிறார்கள்.

நாடு தனது 75ம் ஆண்டு சுதந்திர தினம், 2022ம் ஆண்டு ஆகஸ்ட்டில் புதிய நாடாளுமன்றக் கட்டத்தில் கொண்டாடப்படும். புதிய நாடாளுமன்றத்துக்கு இடம் பெயர்ந்த பின்னர், நடப்பு நாடாளுமன்றக் கட்டிடம் தொல்பொருள் ஆராய்ச்சிப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முக்கிய அம்சங்கள்

* புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் அமையும்.

* இப்போதைய கட்டிடம் வட்ட வடிவில் அமைந்துள்ளது.

* புதிய கட்டிடம் 64,500 சதுர மீட்டரில் அமைக்கப்படுகிறது.

* இது, நில நடுக்கத்தை தாங்கும் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கும்.

* தற்போது மக்களவையில் 543 உறுப்பினர் இருக்கைகளும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் அமரும் வகையில் உள்ளது.

* புதிய நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் 1,224 உறுப்பினர்கள் அமரும் வகையில் வசதியாக கட்டப்பட உள்ளது.

அரசுக்கு 78.10 கோடி மிச்சம்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவதற்கு 940 கோடி செலவாகும் என மத்திய பொதுப்பணித்துறை மதிப்பிட்டு இருந்தது. ஆனால், இந்த கட்டிடத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் 861.90 கோடி எடுத்தது. எல் அண்ட் டி நிறுவனம் 865 கோடி குறிப்பிட்டதால் ஒப்பந்தத்தை இழந்தது. இதன் மூலம், மத்திய அரசு திட்டமிட்ட செலவு தொகையில் இருந்து 78.10 கோடி மிச்சமாகி உள்ளது.

அன்றைய செலவு 83 லட்சம்

தற்போதைய நாடாளுமன்றத்தை கட்டும் பணி 1921ம் ஆண்டு, பிப்ரவரியில் தொடங்கி 6 ஆண்டுகளில் நிறைவடைந்தது. 1927ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி அன்றைய கவர்னர் ஜெனரல் லார்ட் இர்வினால் திறந்து வைக்கப்பட்டது. அன்றைய மதிப்பில் இதற்கு 83 லட்சம் செலவானது.

Related Stories:

>