×

லடாக் எல்லையில் பணிபுரிய திபெத் வாலிபர்களுக்கு சீன ராணுவம் அழைப்பு: குளிர் தாங்காமல் சீன வீரர்கள் தவிப்பதால் முடிவு

பீஜிங்: கிழக்கு லடாக்கில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சீன வீரர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், திபெத் வீரர்களை படையில் சேர்ப்பதற்கு சீனா ஆர்வம் காட்டி வருகின்றது. கிழக்கு லடாக் எல்லையில் கடந்த மே மாதம் முதல் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருகின்றது. இதன் காரணமாக முக்கிய பகுதிகளில் இருநாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கிழக்கு லடாக்கில் மைனஸ் 40 டிகிரி செல்சியசுக்கும் கீழ் வெப்பநிலை சென்றுள்ளது. இதனால், அங்கு கடும் குளிர் நிலவுகிறது. இந்த குளிரை தாங்க முடியாததால், அங்கு நிறுத்தப்பட்டுள்ள சீன வீரர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. பலர் குளிர் தாங்க முடியாமல் இறந்து வருகின்றனர். இதனால், சீன அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இந்திய வீரர்கள் அனாயசமாக இந்த கடும் குளிரிலும் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தனது நாட்டு வீரர்கள் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் பாதிக்கப்படுவதால், லடாக் பகுதியில் திபெத் வீரர்களை சேர்ப்பதற்கு சீன ராணுவம் ஆர்வம் காட்டி வருகின்றது. ஆனால், அவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும். அவர்களின் பெற்றோர், உறவினர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதியாக இருந்திருக்க வேண்டும். சீன அரசால் விரட்டப்பட்டு, இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தலாய் லாமாவுடன் தொடர்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். வெளிநாட்டு அமைப்புக்களுடன் தொடர்பு வைத்திருக்க கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு லடாக்கில் நிலவும் கடும் குளிரை, இந்திய வீரர்கள் சிறப்பாக எதிர்ெகாள்கின்றனர்.

ஏனென்றால், இவர்கள் ஏற்கனவே இதை விட குளிரும், பனியும் நிறைந்த சியாச்சின் மலை உச்சியில் பணியில் ஈடுபட்டவர்கள். மேலும், நாட்டின் பிற பகுதிகளில் உயரமான பனிமலைகளின் உச்சியில் பணியில் ஈடுபட்டவர்கள். அதனால், லடாக்கில் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. அதுமட்மின்றி பல ஆண்டுகளாக இந்திய பாதுகாப்பு படைகள் திபெத்தியர்களை சேர்த்து வருகிறது.  தவிர லடாக் சாரணர்கள், உள்ளுரை சேர்ந்தவர்களும் இந்திய ராணுவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பாக். துப்பாக்கி சூடு
 ஜம்மு காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம இரவு அத்துமீறி தாக்குதலை தொடங்கினார்கள். ஹிராநகரில் பன்சார் எல்லை வெளிப்புற நிலைகள், எல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு தொடங்கிய பாகிஸ்தானின் தாக்குதல் நேற்று அதிகாலை 3.35 மணி வரை நீடித்தது. இதில் ஏற்பட்ட சேதங்கள் தெரியவில்லை. இதேபோல், குர்நாம் மற்றும் கரோல் கிருஷ்ணா பகுதி எல்லைகளிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

நிலவில் கொடி நாட்டியது
நிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக, ‘சாங்க்’இ-5’ ஆளில்லா விண்கலத்தை கடந்த மாதம் 24ம் தேதி சீனா அனுப்பியது. இது, கடந்த 1ம் தேதி  நிலவில் இதுவரை யாரும் கால் பதிக்காத ‘ஓஷன் ஆப் ஸ்டார்ம்ஸ்’ என்ற பகுதியில் தரையிறங்கியது. அங்கிருந்து 2 கிலோ பாறை துகள்களை தோண்டி எடுத்துக் கொண்டு, நேற்று முன்தினம் பூமிக்கு புறப்பட்டது. அதற்கு முன்பாக, நிலவில் தனது நாட்டு கொடியை சீனா ஏற்றியது. இதன் மூலம், அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தப்படியாக நிலவில் இருந்து பாறைகளை எடுத்து வந்து ஆராய்ச்சி செய்யும் 3வது நாடு என்ற பெருமையை சீனா பெறுகிறது.



Tags : army ,Chinese ,border ,Tibetan ,soldiers ,Ladakh , Chinese army calls on Tibetan youth to work on Ladakh border: Chinese troops endure cold
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...