திசையன்விளை அருகே குட்டியுடன் சிறுத்தை நடமாட்டம்-பொதுமக்கள் பீதி

திசையன்விளை : திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் சிறுத்தைகள் நடமாடியதாக பொதுமக்கள் கூறியதை தொடர்ந்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள சங்கனாங்குளம் ஊருக்கு வடக்கே திருவடனேரி குளம் உள்ளது. நேற்று காலை 6.30 மணியளவில், அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் அந்த வழியாக சென்ற போது குட்டியுடன் சிறுத்தை குளக்கரையில் பதுங்கி இருப்பதை கண்டுள்ளார்.

இதனால் மிரண்டு போன அவர் அங்கிருந்து நைசாக நழுவி சிறிது தூரத்தில் நின்று கொண்டு அதனை நோட்டமிட்டார். தொடர்ந்து குட்டியும்,  சிறுத்தையும் குளத்தின் கரையில் உள்ள மயில் மாடசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் வழியாக சென்றது. தோட்டத்தில் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த மயில் மாடசாமி, சிறுத்தைகள் நுழைவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு மரங்களுக்கு இடையில் மறைந்து  கொண்டார். இதையடுத்து சிறுத்தைகள் வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றுள்ளது. சிறிது நேரம் கழித்து அங்கிருந்து ஒரு கி.மீ தூரத்தில் சிறுத்தைகள் சாலையை கடந்து சென்றதாக கிழங்கு வியாபாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து சங்கனாங்குளம் ஊர் மக்கள் திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் திருநெல்வேலி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை  தொடந்து பாளையங்கோட்டை வனச்சரக வனவர் பிரகாஷ் மற்றும் வனகாவலர் மணிகண்டன் இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து விசாரித்ததுடன், பொதுமக்கள் கூறிய இடத்தில் பதிந்திருந்த காலடி தடத்தை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து சிறுத்தையை நேரில் பார்த்த ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் கூறியதாவது, ‘காலை 6.30 மணியளவில் ஊருக்கு அருகிலுள்ள குளத்திற்கு சென்றேன். அப்போது ஒன்று பெரியதும், மற்றொன்று சிறியதுமான இரண்டு சிறுத்தைகள் குளத்தின் கரை வழியாக செல்வதை கண்டேன். காக்கைகள் கூட்டமாக சப்தமிட்டுக் கொண்டிருந்ததை தொடர்ந்து சிறுத்தைகள் குளத்தின் மேடான கரையை கடந்து அருகிலுள்ள தோட்டத்துக்குள் புகுந்தது’ என்றார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று இட்டமொழி அருகே சிறுத்தையை கண்டதாக சிலர் கூறியதை தொடர்ந்து பல நாட்கள் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி, முடிவில் அது வேட்டை நாய் என்று கூறி பரபரப்பை முடிவுக்கு கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>