மானூர் வட்டாரத்தில் செடியிலேயே கருகும் தக்காளிகள்

நெல்லை : நெல்லையில் அடிக்கடி மாறி வரும் சீதோஷ்ண நிலை காரணமாக மானூர் சுற்றுவட்டாரங்களில் தக்காளிகள் செடியிலேயே கருகி வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் மானாவாரி சாகுபடி அதிகம் நடக்கும் மானூர் வட்டாரத்தில் பிசான நெல் சாகுபடி குறைவாகவே நடந்து வருகிறது. மானூர் குளத்தில் போதிய நீர் இருப்பு இல்லாததால் விவசாயிகள் நெல் சாகுபடியை தவிர்த்து, காய்கறி பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். மானூர் அருகே மாவடி, தென்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி பயிரை விவசாயிகள் ஏற்கனவே பயிரிட்டு உள்ளனர்.

இந்நிலையில் நெல்லையில் தற்போது நிலவும் சீரற்ற சீதோஷ்ண நிலை, தக்காளி பயிரை அதிகம் பாதித்து வருகிறது. கடந்த வாரம் வெயில் அடித்த நிலையில், அதிகாலையில் பனி பெய்தது. கடந்த ஒரு வாரமாக மேக மூட்டத்தோடு அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் செடியில் காணப்படும் தக்காளி காய்கள் கருகி வருகின்றன. மேலும் பழுத்த தக்காளிகளும், அழுகிய நிலையில் காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.

நெல்ைல மார்க்கெட்டுகளில் தற்போது 1 கிலோ தக்காளி ரூ.25க்கு விற்கப்படுகிறது. ஆனால் வியாபாரிகள் விவசாயிகளிடம் கிலோ ரூ.10 முதல் 12 வரையே கொள்முதல் செய்து வருகின்றனர். தக்காளி காய்கள் கருகி வருவதால் கிலோவுக்கு கிடைக்கும் ரூ.10ம் கிடைப்பதில் சிரமம் நிலவுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>