கொடைக்கானலில் காற்றுடன் கனமழை பழநி மலைச்சாலையில் மண்சரிவு

கொடைக்கானல் :கொடைக்கானலில் தொடர் மழையால் பழநி மலைச்சாலையில் மண்சரிவு, பூம்பாறை சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் புரெவி புயலால் நேற்று முன்தினம் இரவு முதல் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அருவிகள், நீரோடைகள், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் கோம்பைக்காடு புல்லாவெளி அருகே, பிரதான சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி மூலம் மண்சரிவை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

கொடைக்கானல் மேல்மலைப்பகுதி பூம்பாறை சாலையில், கிருஷ்ணன் கோயில் அருகே, நேற்று முன்தினம் இரவு சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். தொடர் மழையால் கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.காற்றுடன் கனமழை தொடர்வதால், நேற்று 2வது நாளாக மலைச்சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது.

கொடைக்கானல் அடிவாரத்தில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று பகல் ஒரு மணி அளவில் போக்குவரத்து தடை நீக்கப்பட்டது கொடைக்கானல் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ‘‘கொடைக்கானல் மலைப்பகுதியில் கொஞ்சம் மழை குறைந்ததால், போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இரவு நேரங்களில் மலைச்சாலைகளில் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>