ரயிலில் உட்கார இடம் தராததால் சக பயணியை சுட்டு கொன்ற அஸ்ஸாம் சிஆர்பிஎப் வீரர் கைது

திருவள்ளூர்: அஸ்ஸாம் மாநிலம் சில்சாகர் மாவட்டம் பாலியாகட் அஞ்சல் ரிப்பைமுக் கிராமத்தை சேர்ந்தவர்  அத்தூல் சந்திர தாஸ்(58). சிஆர்பிஎப் வீரரான இவர் கடந்த 6.7.1996ம் தேதி இரவு சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும்  சேரன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது உடன் பயணித்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா கூப்பிட்டான் பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜா(36) என்பவர் உட்கார இருக்கை தராததால் 2  பேருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அத்தூல் சந்திர தாஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ராஜாவை சுட்டார். அதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் அரக்கோணம் ரயில்வே போலீசார்  வழக்கு பதிவு செய்து, கடந்த 14.7.1996ம் தேதி அத்தூல் சந்திர தாஸை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.  

இந்த வழக்கு கடந்த 18.1.2002ம் தேதி கடம்பத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையை தொடர்ந்து வந்த நிலையில் அத்தூல் சந்திர தாஸ் நீதிமன்ற வாய்தாவுக்கு ஆஜராகவில்லை.  எனவே அவர் மீது 2002ம் ஆண்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, நீண்ட ஆண்டுகளாக நிலுவையிலிருந்தது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி அரவிந்தன் உத்தரவின்பேரில் திருவள்ளூர் டி.எஸ்.பி.துரைபாண்டியன்  தலைமையில் எஸ்.ஐக்கள் சிவா, சாரதி மற்றும் தலைமை காவலர் நாகேந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் அத்தூல் சந்திர தாஸை மாவட்ட சைபர் பிரிவு ஏட்டு பழனி கொடுத்த தகவலின்படி அஸ்ஸாம் மாநிலம் தேமாஜி  மாவட்டம் தங்கனபாரா கிராமத்தில் கடந்த 21ம் தேதி கைது செய்து நேற்று திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>