×

தொடர் மழையால் தண்ணீரில் தத்தளிக்கும் கிராமங்கள்

காஞ்சிபுரம்: வடகிழக்குப் பருவமழை தொடங்கி, காஞ்சி, செங்கை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ஓய்ந்த மழை, நேற்று அதிகாலை முதல் மீண்டும் தொடர்ந்து பெய்தது.  இதனால் காஞ்சிபுரத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் உலகளந்த பெருமாள் கோயில் எதிரில் மேனுவல் வழியாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து வெளியேறியது.
தொடர் மழையால் வேலைக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நிற்காமல்  பெய்ததால் மாவட்டத்தின் பெரிய ஏரிகளான தையூர், கொண்டங்கி, மானாம்பதி, சிறுதாவூர், தண்டலம், செம்பாக்கம், ஆமூர், பையனூர் உள்ளிட்ட 50 கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால், உபரிநீர் கலங்கல் வழியாக  வெளியேறி கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அங்கிருந்த மக்கள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் வீட்டில் இருக்க பயந்து, உறவினர்களின் வீட்டில் தஞ்சமடைந்தனர்.

குறிப்பாக மானாம்பதி கிராம ஏரியில் உபரிநீர் வெளியேறி ஆனந்தபுரம் கிராமத்தை மூழ்கடித்தது. அதேபோன்று பெரிய விப்பேடு, சின்ன விப்பேடு, அருங்குன்றம், திருநிலை கிராமங்களிலும் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. தையூர் கிராமத்தில்  உள்ள சின்ன பில்லேரி, பெரிய பில்லேரி, கோமான் நகர், சின்னமா நகர், பெரியமா நகர், ராஜேஸ்வரி நகர், ராமமூர்த்தி நகர் ஆகிய குடியிருப்புகளில் உள்ள தெருக்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது.
உத்திரமேரூர்: உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. உத்திரமேரூர் அடுத்த சித்தனக்காவூர் கிராமத்தில் உள்ள ஏரி முழு  கொள்ளவை எட்டியது. இதையடுத்து, ஏரியின் மதகில் பழுது ஏற்பட்டு ஏரி நீர் வெளியேறியது. தகவலறிந்து, பொதுப்பணித்துறையினர், அங்கு சென்று, பொதுமக்கள் உதவியோடு மணல் மூட்டைகள் அடுக்கி தண்ணீர் வெளியேற்றத்தை  தடுத்தனர்.

இதேபோல், உத்திரமேரூர் அருகே வாடாதவூர், காவிதண்டலம் ஆகிய கிராமங்களில் மழைநீர், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சம்பவ இடத்துக்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம்  கால்வாய்கள் அமைத்து மழைநீரை வெளியேற்றினர். வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பெரிய ஏரியில் இருந்து உபரிநீர் நேற்று காலை முதல் வெளியேறியது. இதனால் ஊத்துக்காடு தனியார் குடியிருப்பு பகுதியின் கடைசியில்  இருந்த தனிவீட்டை நேற்று மாலை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் மீட்பு குழுவினர், அங்கு சென்று படகு மூலம் அந்த வீட்டில் இருந்த வெங்கடேசன் (69) ராஜேஸ்வரி  (58) சக்கரவர்த்தி (31) யமுனா (28) ஹெலன் (8) கேத்தரின் (6) மற்றும் நான்கு மாத கைக்குழந்தையை பத்திரமாக மீட்டு, அவர்களது உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பினர்.

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி மகாலட்சுமி நகர், ஜெயலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் வெளியே வர முடியாமலும், மின்சாரம்,  உணவு, குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர். மேலும், இரவில் தூங்கும்போது மழை வெள்ளத்தால், உயிருக்கு உத்தரவாதம் இல்லை என குமுறலுடன் கூறுகின்றனர். கூடுவாஞ்சேரி, ஊராப்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி
களில் அரசு அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிடவில்லை. இதையடுத்து, தன்னார்வ தொண்டு நிறுவத்தினர் குடிநீர், ரொட்டி ஆகியவை வழங்கினர். மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி சாய்ராம் நகரில், 100க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன.  தற்போது, பெய்து வரும் மழையால், அப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், வீட்டில் இருந்து யாரும் வெளியேற முடியாமலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இப்பகுதியில், சுமார் 3 அடிக்கு  தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை தொடராமல் இருந்தாலே, இங்கு தேங்கியுள்ள தண்ணீர் வடிய குறைந்தபட்சம் ஒரு வாரம் தேவை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்
செங்கல்பட்டு அடுத்த  மேலையூர் ஏரிக்கரை உடைந்து, அருகில் உள்ள ஜோதிபா அவின்யூ குடியிருப்பு பகுதியில் அதிகாலை முதலே இடுப்பளவில் மழைநீர் ஆறாக ஓடியது. சக்கீனா சர்ச் சாலை, ராமகிருஷ்ணா நகர், பவானி நகர் ஆகிய  பகுதியில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்ததால், மேலையூர் ஏரியில் முழு கொள்ளளவை எட்டி, கரை உடைந்தது. அதில் இருந்து வெளியேறிய தண்ணீர், குடியிருப்பு பகுதி முழுவதும் சூழ்ந்து, அப்பகுதி வெள்ளக்காடாக காட்சியளித்தது.  பொதுமக்கள் சிலர், தங்களது உறவினர்.வீடுகளில் தஞ்சமடைந்தனர். பலர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம், மகாலட்சுமி நகர், வைபவ் நகர் முழுவதும் உள்ள வீடுகள் வெள்ளத்தில்  மிதக்கின்றன. இதனால்  அங்குள்ள மக்கள் மொட்டை மாடியில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள், உணவு குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.  

இதுகுறித்து அனைத்துத்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாரும் வரவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. சிங்கபெருமாள்கோயில் பகுதியில் உள்ள விஞ்சியம்பாக்கம் ஏரியில் உபரிநீர்  வெளியேறுவதால் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இடுப்பளவு தண்ணீர் ஓடியது. இதில் செல்லும் வாகனங்கள் தத்தளித்து நகர்ந்தன. இதையொட்டி அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதித்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில்  பெய்த தொடர் மழையால், 528 பொதுப்பணித்துறை ஏரிகளில் 400 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

மீண்டும் உடைந்தது மதுரா காட்டேரி
குன்றத்தூர் ஒன்றியம், வட்டம்பக்கம் ஊராட்சியில் உள்ள மதுரா காட்டேரி ஏரி சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு ஒரு கலங்கல், ஒரு மதகு உள்ளது. இந்த மதகு மூலம் அதே பகுதியில் உள்ள சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள்  பயன்பெறுகின்றன. குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, கடந்த வாரம் பெய்த கனமழையில் முழுவதுமாக நிரம்பியது. அப்போது திடீரென ஏரியின் ஒரு பகுதி கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர்  வெளியேறியது. இதை கண்ட அப்பகுதி விவசாயிகள் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரி செய்ய முயற்சித்தனர். ஆனால் தண்ணீர் வேகமாக வெளியேறியதால் உடைப்பை சரி செய்ய முடியவில்லை. பின்னர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து  பொக்லைன் இயந்திரம் மூலம் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரி செய்தனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால், மதுரா காட்டேரி ஏரி நிரம்பி, ஏற்கனவே ஏற்பட்ட பகுதியில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர்  வெளியேறுகிறது.

Tags : Villages , Villages staggered by water due to continuous rains
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை