கன்னடத்தை கற்றது, நன்னடத்தைகளால் பலனில்லை தண்டனை காலத்துக்கு முன்பாக சசிகலா விடுதலையாக முடியாது: பெங்களூரு சிறை நிர்வாகம் திட்டவட்ட அறிவிப்பு

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்ததை தொடர்ந்து கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர்   அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி 14ம் தேதி முடிவடைகிறது. நன்னடத்தை மற்றும் இதே வழக்கில் ஏற்கனவே 35 நாட்கள் சிறையில் இருந்த காலத்தை கழித்து முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்  என்ற தகவல் வெளியாகியது. நீதிமன்றம் விதித்த அபராத தொகை ₹10 ேகாடியே 10 ஆயிரத்தை கடந்த மாதம் 17ம் தேதி வக்கீல் பி.முத்துகுமார் செலுத்தியதால், இந்த வார இறுதிக்குள் சசிகலா விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல்  வெளியாகி வருகிறது. இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் விடுதலை, சிறையில் அவருக்கு வழங்கப்படும் விடுமுறை, நன்னடத்தை உள்ளிட்ட காரணங்களால் முன்கூட்டியே விடுதலை செய்ய  வாய்ப்புள்ளதா? என கேட்டு சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் ெகாடுக்கும்படி கடந்த அக்டோபர் 29ம் தேதி விண்ணப்பித்தார்.

அவரின் கேள்விக்கு சிறை நிர்வாகம் அஞ்சல் மூலம் நேற்று அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு நான்காண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது. அதை தொடர்ந்து அவர்  2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சிறையில் உள்ளார். அவரின் தண்டனை காலம் 2021 பிப்ரவரி 14ம் தேதி முடிகிறது. இதே வழக்கில் 31.1.1997 முதல் 12.2.1997 வரை 13 நாட்களும் 27.9.2014 முதல் 18.10.2024 வரை 22 நாட்கள் என 35 நாட்கள்  சிறையில் இருந்துள்ளனர். அந்த நாட்கள் தண்டனை காலத்தில் கழிக்கப்படுகிறது.அதே சமயத்தில் சிறையில் இருந்தபோது மொத்தம் 17 நாட்கள் பரோலில் சென்றுள்ளது தண்டனை காலத்தில் சேர்க்கப்படுகிறது. இவற்றை கூட்டிக்கழித்து பின்  சசிகலாவின் விடுதலை நாள் 27.1.2021 என்பதை சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், தண்டனை காலத்தில் கன்னடம் கற்று கொண்டது, கம்ப்யூட்டர் பயிற்சி முடித்தது, தோட்ட வேலை செய்தது, சிறையில் நன்னடத்தையுடன் நடந்து  கொண்டது என்ற எந்த சலுகையும் விடுதலைக்கு பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்கூட்டியே விடுதலையாகும் சலுகை யாருக்கு கிடைக்கும்?

தகவல் உரிமை ஆர்வலருக்கு சிறை நிர்வாகம் அனுப்பியுள்ள பதிலில் மேலும், ‘கிரிமினல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறையில் இருந்து, 60 வயது கடந்த பெண் கைதியாக இருக்கும் பட்சத்தில் விடுதலை காலம் முடிவதற்கு முன்பே விடுதலை  செய்ய சிறை விதியில் இடமுள்ளது. இந்த சலுகை சசிகலாவுக்கு பொருந்தாது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>