×

தொடர் கன மழையால் வெள்ளத்தில் மிதக்கிறது கடலூர் மாவட்டம்

கடலூர்: கடலூர் மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால் மாவட்டம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. முக்கிய சாலைகளில் மழை  நீர் சூழ்ந்ததால்  போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல் வலுவிழந்த நிலையில், அதன் நகரும் வேகமும் வீரியமும் குறைந்தது. இதனால் தமிழகத்துக்கு புயல் அபாயம்  நீங்கியது. ஆனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 2  நாட்களாக  விட்டு, விட்டு பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. முழுவதும்  தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. கன மழை காரணமாக மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக பட்சமாக சிதம்பரத்தில் 34 செமீ மழை பதிவாகியுள்ளது.  கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பின. பெருமாள் ஏரியில் இருந்து உபரி நீர்   12 ஆயிரம் கன அடி வெளியேற்றப்படுவதால் அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள 23 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. வீராணம் ஏரியில் இருந்து  வெள்ளியங்கால் ஓடையில் 4 ஆயிரம் கன அடியும், விஎன்எஸ் மதகு மூலம் 1500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.பரவனாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதாலும், என்எல்சி சுரங்கங்களில் இருந்து உபரி நீர்  வெளியேற்றப்படுவதால் குறிஞ்சிப்பாடி, கல்குணம், ஓணான்குப்பம், கொளக்குடி பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கன மழை, பரவனாற்றில் வெள்ளம், பெருமாள் ஏரி, வீராணம் ஏரி தண்ணீர் திறப்பு ஆகியவற்றின்  காரணமாக நூற்றிக்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல ஆயிரக்கணக்கான விளை நிலங்களில் தண்ணீரில் முழ்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.  

மழை தொடர்ந்த பெய்து வருவதால் கடலூர் மாவட்டமே வெள்ளத்தில் மிதக்கிறது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளனர். விவசாயிகள் வேதனை: தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 1.20  லட்சம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி முடிந்துள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பல பகுதிகள் நீரில் சூழ்ந்துள்ளன. மேலும் 40 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்களை மழைநீர் மூழ்கடித்துள்ளது. திருவையாறு  அடுத்த வெள்ளாம்பெரம்பூர் அருகே கோனகடுங்கலாறு வண்டி பாதை உடைப்பு ஏற்பட்டு 2000 ஏக்கர் சம்பா பயிர் தண்ணீரில் மூழ்கியது. ஒரத்தநாடு நெய்வேலி  வடபாதி கிராமத்தில் 125 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்நிலையில்   கடந்த 3 நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் பெரிய ஏரிக்கரையின் தெற்கு  பகுதியில் 20 அடி அகலத்துக்கு நேற்று உடைந்தது. இதனால் ஏரியில் இருந்து  வெளியேறும் மழைநீர் மீண்டும் அக்னி ஆற்றில் கலந்து வருகிறது.

கொள்ளிடம் பகுதியில் 13 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் தண்ணீரில் மூழ்கியது. சம்பா நெற்பயிர் கதிர் வரப்போகும்  நிலையில் தற்போது பெய்த மழை நெற்பயிரை மூழ்கடித்து விட்டதால் நெற்பயிர்  பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டெல்டா  மாவட்டங்களில், சுமார் 1  லட்சம் ஏக்கர் சம்பா பயிர் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையில்  உள்ளனர்.விவசாயிகள் வேதனையில் உள்ளனர். நாகை காடம்பாடி பகுதியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு  கிடங்கில் வைத்திருந்த  ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சேதம் அடைந்தது. குமரி, தூத்துக்குடியில் மழை குறைவு: புரெவி புயல் தென் தமிழகத்தை குறிப்பாக நெல்லை. தூத்துக்குடி, குமரி மாவட்டத்தை தாக்கும். அங்கு கனமழை கொட்டித் தீர்க்கும் என்று வானிலை  ஆய்வு நிறுவனம் எச்சரித்திருந்தது. ஆனால், புயல் வலுவிழந்து, மன்னார் வளைகுடாவிலேயே நிலை கொண்டிருந்ததால், நெல்லை, தூத்துக்குடி, குமரியில் குறைவான மழையே பதிவானது. இந்த மாவட்டங்களில் மிதமான மழை மட்டுமே  பெய்தது. தூத்துக்குடியில் 600க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

  கொடைக்கானலில் மண்சரிவு: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் புரெவி புயலால் நேற்று முன்தினம் இரவு முதல் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அருவிகள், நீரோடைகள்,  சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது ஏற்காடு: சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் இடைவிடாது சாரல் மழை  பெய்தது. நேற்று முன்தினம் இரவு, ஏற்காட்டில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.  50க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல், பல இடங்களில் மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால்,  இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கியது. மக்கள் அவதியடைந்தனர்.

ராமேஸ்வரத்தில் 50 படகுகள் சேதம்
நேற்று முன்தினம் இரவு முழுவதும் ராமேஸ்வரம் தீவு பகுதியில் தொடர்ந்து கனமழை கொட்டியது. நேற்று காலை வரை 24 மணிநேரத்தில் ராமேஸ்வரம் நகர் பகுதியில் மட்டும் 20 செமீ மழை பதிவானது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மண்டபம் கோயில்வாடி கடற்கரை பகுதியில்   கரையில் இருந்து 50 அடி தூரத்திற்கு சீறிவந்த கடல் அலையால் மீனவர்களின் குடிசைகளை கடல் நீர் சூழ்ந்தது. கடலில் நிறுத்தப்பட்டிருந்த  ஏராளமான படகுகள் சேதமடைந்து கரை ஒதுங்கின. பாம்பன்  பகுதியில்  அடித்த சூறைக்காற்றினால் குந்துகால் கடல்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட படகுகள்  ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன.

செல்பி எடுக்க முயன்ற சென்னை மாணவி ஏரியில் மூழ்கி பலி: àகாப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் மீட்பு àவந்தவாசி அருகே சோகம்
சென்னை வடபழனியை சேர்ந்தவர் நீலமேகம், கார் டிரைவர். இவரது மனைவி புஷ்பா. இவர்களது மகள் சினேகா(17). சென்னையில் பிளஸ்2 படித்து வந்தார். புஷ்பாவின் தங்கை மீனாவின் வீடு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த  சின்ன சேத்துப்பட்டு கிராமத்தில் உள்ளது. இவரது வீட்டுக்கு சினேகா, சென்னை வடபழனியில் உள்ள மீனாவின் மற்றொரு அக்கா சுமதியின் மகன் கிரீஷ்(8), மகள் நிகிதா(6) ஆகியோர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வந்தனர். இந்நிலையில் சினேகா, கிரீஷ், நிகிதா மற்றும் மீனாவின் மகள் மதி(14) ஆகிய 4 பேரும் நேற்று மாலை அருகில் உள்ள கீழ்கொவளைவேடு ஏரி நிரம்பியிருப்பதை பார்க்க சென்றனர். ஏரிக்கரையோரம் நின்று சினேகா செல்பி எடுக்க  முயன்றுள்ளார்.

அப்போது கால் தவறி சினேகா ஏரியில் விழுந்து மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் கிரீஷ், நிகிதா, மதி ஆகியோர் அவரை காப்பாற்ற ஏரியில் இறங்கியபோது அவர்களும் தண்ணீரில் தத்தளித்தபடி கூச்சலிட்டனர். இவர்களது  அலறல் சத்தம் கேட்டு வந்த அதே கிராமத்தை சேர்ந்த சரவணன், அங்கிருந்தவர்களின் உதவியுடன் 4 பேரையும் மீட்டார். இதையடுத்து, 4 பேரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த  டாக்டர்கள், சினேகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 3 சிறுவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரும் புயலை தாங்கி நின்ற பெருமைக்குரியது: கனமழைக்கு இடிந்து விழுந்தது தனுஷ்கோடி தேவாலயச் சுவர்
தனுஷ்கோடியில் 1964 புயலிலேயே பெரும் சேதங்களுடன் தப்பிப்பிழைத்த தேவாலய சுவரின் ஒரு பகுதி,  தற்போதைய புரெவி புயலால் இடிந்து விழுந்தது. இது பழமை ஆர்வலர்களை கவலைக்கு ஆளாக்கி இருக்கிறது. கடந்த 1964, டிச. 23ல் ஆக்ரோஷ அலைகளுக்குள் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி சிக்கி அழிந்தது. 1914ல் தனுஷ்கோடியில் துறைமுகம் அமைத்திட்ட ஆங்கிலேயர்கள், பவளப்பாறைகள், சுண்ணாம்புக் கற்களால் இங்கு  தேவாலயம்  அமைத்தனர். 1964 புயலில் தப்பிப்பிழைத்த இந்த தேவாலயத்தின் பக்கவாட்டுச் சுவர்களே தனுஷ்கோடியின் வரலாற்று அடையாளப் பெருமையை இன்றளவுக்கும் காட்டி வந்தன.

பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து புயல் தாக்கிய அடையாளமாக இருக்கும் இந்த தேவாலயப்பகுதியை கண்டு சென்றனர். தேவாலயத்தின் கற்கள் தொடர்ந்து திருடுபோனதை தொடர்ந்து, பழமைச் சின்னம் அழிந்து போகும்  ஆபத்தை அறிந்து பலரும் இதனைப் பாதுகாக்க கோரிக்கை வைத்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் துவங்கிய புரெவி புயல் காரணமாக தனுஷ்கோடியில் இந்த பழமை தேவாலயத்தின் மேற்குப் புறச்சுவர் நேற்று அதிகாலை இடிந்து  விழுந்தது.

Tags : Cuddalore district , Cuddalore district is flooded due to continuous heavy rains
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்