×

ரஜினிகாந்த் முதலில் கட்சியை பதிவு செய்யட்டும், அதற்கு பிறகு பதில் தருகிறேன் : சிவகங்கையில் முதல்வர் பழனிசாமி பேச்சு

சிவகங்கை : ரஜினிகாந்த் முதலில் கட்சியை பதிவு செய்யட்டும், அதற்கு பிறகு பதில் தருகிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து வரும் முதல்வர் பழனிசாமி இன்று சிவகங்கை மாவட்டத்துக்கு சென்றுள்ளார். அம்மாவட்டத்தின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை செய்த முதல்வர், மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சித் திட்ட பணிகளை தொடக்கிவைத்தார்.

பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘சிவகங்கையில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சிவகங்கையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது சிவகங்கை மக்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் திட்டங்களுக்கே அரசு முன்னுரிமை கொடுக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. ரூ.14,500 கோடி மதிப்பிலான காவிரி – குண்டாறு திட்டத்திற்கு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்படும். சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்களை 100லிருந்து 150 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ‘ எனத் தெரிவித்தார்.

மேலும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி யின் முழு திருவுருவப்படமும், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியாரின் முழு உருவப்படமும், மோகன் குமாரமங்கலத்தின் உருவப்படமும் சட்டமன்றத்தில் வைக்கப்படும் என தெரிவித்த முதல்வர், 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயரிட்டு அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ரஜினி கட்சி தொடங்கவிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், முதலில் நடிகர் ரஜினிகாந்த் கட்சியை பதிவு செய்யட்டும் அதற்கு பிறகு பதில் தருகிறேன். தற்போதைக்கு அவர் கருத்தை தான் சொல்லியிருக்கிறார் என்றும் வாய்ப்பு இருந்தால் ரஜினிகாந்துடன் கூட்டணி அமையலாம் என ஓபிஎஸ் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார்.

Tags : Rajinikanth ,party ,speech ,Palanisamy ,Sivagangai , Rajinikanth, Sivagangai, Chief Minister Palanisamy, Speech
× RELATED பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்...