×

15 கோடி செல்போன் கொள்ளை வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றம்: சர்வதேச தொடர்பால் நடவடிக்கை

ஓசூர்: காஞ்சிபுரத்தில் இருந்து 15 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக் கொண்டு மும்பை சென்ற கன்டெய்னர் லாரியை, கடந்த அக்டோபர் 21ம் தேதி சூளகிரி அருகே வழிமறித்த கும்பல், டிரைவர், கிளீனரை தாக்கி 15 கோடி மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 10 பேரை கைது செய்துள்ளனர். மேலும் கொள்ளையர்கள் பயன்படுத்திய 4 லாரிகள், 2 கார்களை பறிமுதல் செய்தனர். கைதான கொள்ளையர்கள் மற்றும் லாரி, கார்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளன. அவர்களிடம் நடத்திய விசாரணையில், மொத்தம் 18 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மீதம் உள்ள 8 பேர் 17, 18 வயதுடையவர்கள் என கூறப்படுகிறது. அவர்களையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 கோடி செல்போன்களை கொள்ளையடித்த கும்பலுக்கு, சர்வதேச அளவில் தொடர்பு உள்ளது. இங்கிருந்து கொள்ளையடித்த செல்போன்களை வங்கதேசத்திற்கு விற்பனை செய்துள்ளனர். 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான செல்போன்கள் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரத்துக்கு குறைவாக அங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.  கொள்ளை கும்பலுக்கு சர்வதேச கொள்ளையர்கள் கமிஷன் அடிப்படையில் பணம் கொடுத்துள்ளனர். அவ்வாறு 6 கோடி தொகை ஹவாலா பணமாக வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யா, துபாய், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த சர்வதேச கொள்ளையர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது.

இவர்கள் செல்போன்கள், விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை, சர்வதேச அளவில் கடத்தக் கூடிய கும்பலை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சர்வதேச அளவில் உள்ள இந்த கொள்ளையர்களை பிடிக்க, இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்ற கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.



Tags : NIA , 15 crore cell phone robbery case transferred to NIA probe
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...