×

டெல்லியில் மத்திய அமைச்சர்கள்-விவசாயிகள் இடையே நடந்த 4ம் சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: நாளை மீண்டும் பேச முடிவு

புதுடெல்லி: மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே நேற்று நடந்த 4ம் சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, பஞ்சாப், அரியானா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லைகளில் தொடர்ந்து 8வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால், டெல்லி-அரியானாவை இணைக்கும் சிங்கு, திக்ரி, டெல்லி-உபி.யை இணைக்கும் காஜிபூர் உள்ளிட்ட எல்லைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த போராட்டத்துக்கு தீர்வு காண்பதற்காக, மத்திய அரசுக்கும் 32 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே முதல் சுற்று பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடந்தது. இதில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகத் துறை இணை அமைச்சரும் பஞ்சாப் எம்பியுமான சோம் பிரகாஷ் பங்கேற்றனர். இதில் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய புதிய கமிட்டி அமைக்கப்படும் என்ற அரசின் ஆலோசனையை விவசாயிகள் ஏற்கவில்லை. இதனால் எந்த முக்கிய முடிவும் எட்டப்படவில்லை.

இருப்பினும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை (நேற்று) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. முன்னதாக, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். அப்போது விவசாயிகளின் பிரச்னைக்கு சுமூக தீர்வு காணுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டு கொண்டார். மத்திய அமைச்சர்கள் - விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தை, பல சுற்றுகளாக நடந்தது.  

ஏறக்குறைய 8 மணி நேரம், 3 சுற்றுகளாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் வழக்கம் போல் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிதகள் உறுதியாக இருந்தனர். இதையடுத்து, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், தங்களது போராட்டத்தை தொடரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

* பத்ம விபூஷன் வேண்டாம்
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வெளியிட்ட டிவிட்டரில், ``நான் இந்த நிலையில் இருப்பதற்கு மக்களே காரணம். அதிலும் குறிப்பாக சாதாரண விவசாயிகள். அவர்கள் இன்று தங்கள் மரியாதையை இழந்து நிற்பதை பார்த்த பிறகு, பத்ம விபூஷண் விருது எனக்கு தேவையில்லை,’’என்று குறிப்பிட்டுள்ளார். பத்ம விபூஷன் விருதினை இன்று அவர் திருப்பி அளிக்கிறார்.

* மம்தா மிரட்டல்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ``விவசாயிகள், அவர்களது வாழ்க்கை, வாழ்வாதாரம் குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளேன். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில், மாநிலம் மற்றும் நாடு தழுவிய போராட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் முன்னெடுக்கும். ஆரம்பம் முதல், விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களுக்கு திரிணாமுல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது,’’ என்று கூறியுள்ளார்.

Tags : round ,talks ,Delhi ,Union Ministers , 4th round of talks between Union Ministers and farmers in Delhi also failed: Decision to speak again tomorrow
× RELATED 4வது சுற்றில் ரைபாகினா