×

ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினி அறிவிப்பு

சென்னை: ஜனவரியில் அரசியல் கட்சி துவங்க இருப்பதாகவும் அதற்கான தேதியை டிசம்பர் 31ல் அறிவிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த நவம்பர் 30ம் தேதி, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அரசியல் கட்சி துவங்குவது பற்றியும் தனது உடல் நிலை பற்றியும் ரஜினி பேசினார். கட்சி தொடங்கலாமா, வேண்டாமா என மாவட்ட செயலாளர்களிடம் அவர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் நேற்று கூறியிருப்பதாவது: ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும். இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

பின்னர் போயஸ் கார்டனிலுள்ள வீட்டிற்கு வெளியே நிருபர்களை சந்தித்து ரஜினி கூறியதாவது:
2017ம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக உறுதி கூறியிருந்தேன். கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும்போது தேர்தலுக்கு முன்னால் கட்சி ஆரம்பிப்பேன், 234 தொகுதியிலும் போட்டியிடுவோம் என்று அறிவித்தேன். கடந்த மார்ச் மாதம் பத்திரிகையாளர்களை சந்தித்து மக்களிடம் எழுச்சி வரவேண்டும். அந்த எழுச்சியை உண்டாக்க வேண்டும். எழுச்சி வந்த பிறகுதான் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லி இருந்தேன். இதற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்திக்கவும் திட்டமிட்டிருந்தேன். கொரோனா பிரச்னை காரணமாக அதை செய்ய முடியவில்லை. எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது சிலருக்கு தெரியும். பலருக்கு தெரியாது.

இந்த சிகிச்சையால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். ஆனால் கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். அதுதான் பெரிய பிரச்னை. என்றாலும் நான் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று நலமாக திரும்ப காரணம் தமிழக மக்களின் பிரார்த்தனைதான். அதனாலேயே அவர்களை சந்திக்க விரும்பினேன். அந்த மக்களுக்காக என் உயிர் போகும் என்றால் என்னை விட சந்தோஷப்படுவர்கள் யாரும் இருக்க முடியாது. நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன். தமிழ்  நாட்டிற்கு ஒரு அரசியல் மாற்றம் காலத்தின் கட்டாயம். அந்த மாற்றம் வந்தே தீர வேண்டும். இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. அதை மக்கள்தான்  முடிவு செய்ய வேண்டும். நான் வருவேன்.

ஆனால் அந்த மாற்றத்தை மக்கள்தான்  உருவாக்க வேண்டும். நான் வெற்றி அடைந்தால் அது மக்களின் வெற்றி, நான் தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வி. கடினமாக வேலைசெய்து என்னால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை  இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு தலையெழுத்து இருப்பதுபோன்று, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தலையெழுத்து இருக்கிறது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. நிச்சயம் அது நடக்கும். ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. மாற்றுவோம். எல்லாவற்றையும் மாற்றுவோம். சினிமாவை பொறுத்தவரையில் அண்ணாத்த படத்தின் 40 சதவிகித பணிகள் முடிக்க வேண்டியது  இருக்கிறது. அதை முடித்து கொடுக்க வேண்டியது என் கடமை. இவ்வாறு ரஜினி கூறினார்.

தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாக ரஜினி அறிவித்தார். பேட்டியின்போது அர்ஜுன மூர்த்தி ரஜினியின் அருகில் நின்றிருந்தார். அவரும் செய்தியாளர்களிடம் பேசினார். அர்ஜுன மூர்த்தி, பாரதிய ஜனதா கட்சியின்  அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்தவர். அவர் நேற்று தனது பாஜ பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரமுகர் தமிழருவி மணியன் ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார். இவர்  தமிழக காந்திய மக்கள் இயக்கம் என்ற கட்சியை நடத்தி வந்தார்.

Tags : party ,launch ,announcement ,Actor Rajini , Political party launch in January: Actor Rajini's announcement
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...