×

தமிழகத்தில் முட்டி மோதும் அரசு துறைகள்; பத்திரபதிவு துறை பரிந்துரைகளை கிடப்பில் போடும் அவலம்: காற்றில் பறக்கும் முதல்வர் உத்தரவு

நாகர்கோவில்: பத்திர பதிவு செய்ததும் பட்டா பெயர் மாறுதலுக்கு பத்திர பதிவு அலுவலகம் அனுப்பும் பரிந்துரைகளை வருவாய்த்துறை மற்றும் சர்வே துறை அதிகாரிகள் தட்டிக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் பத்திரம் பதிவு செய்யும் போதே, குறிப்பிட்ட சொத்தை வருவாய்த் துறையில் பட்டா பெயர் மாற்றத்திற்காக பத்திர பதிவு துறை முன்பு ரூ.40 கட்டணமாக வசூலித்து வந்தது. ஆனால் நடைமுறையில் இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. எனவே சொத்தை வாங்கியவர் தான், பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்று துணை தாசில்தாரிடம் விண்ணப்பித்து, கிராம நிர்வாக அதிகாரி மூலம் வருவாய்த்துறை அ பதிவேட்டில் பதிவு செய்து அதன் பின்னர், பட்டா வழங்கப்படும்.

கரத்தீர்வை ரசீதும் சொத்து வாங்கியவர் பெயருக்கு வழங்கப்படும். இதற்காக சொத்தை வாங்கியவர்கள் பல மாதங்கள் அலைந்து திரிவதுடன், உரியவர்களை சொத்தின் மதிப்பிற்கு ஏற்ப கவனித்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்யப்படும். இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பத்திரம் பதிவு செய்யும் போதே, சம்மந்தப்பட்ட பத்திர பதிவு துறை அலுவலகம் மூலம், தனிப்பட்டாவாக இருந்தால் வருவாய்த்துறைக்கும், கூட்டுப்பட்டாவாக இருந்தால், அதனை அளவீடு செய்து தனிப்பட்டா வழங்க நில அளவியல் துறைக்கும் பரிந்துரை செய்து பட்டா வழங்க உத்தரவிட்டார். இதற்கு ரூ.40 கட்டணமாக இருந்தது.

இது 10 மடங்கு அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ.400 ஆக வசூலிக்கப்படுகிறது. இதன்படி சொத்தை வாங்குபவர்கள் தேவையின்றி அலைய வேண்டியது இல்லை என்பதால், கட்டணம் அதிகரித்தாலும், பட்டா பெயர் மாற்றம் ஆகிறதே என வரவேற்றனர். ஆனால் பத்திரபதிவு துறை பரிந்துரை செய்யும் ெபயர் மாற்றத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகளோ அல்லது நில அளவியல் துறை அதிகாரிகளோ போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறப்படுகிறது. பெரும்பாலான பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சிலவற்றிற்கு ஏதாவது காரணம் கூறி பரிந்துரையை தள்ளுபடி செய்து செக் வைக்கின்றனர்.

சொத்தை வாங்கியவர்கள் புரோக்கர்கள் மூலம் அணுகி இதற்கான மாமூலை அளித்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்கின்றனர். நில அளவியல் துறையினர் நிலத்தை அளந்து சான்றளிக்கின்றனர். இவ்வாறு பணம் செலவு செய்தாலும், கூட ஏனோ சிலர் மக்களை அலைய விடுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே இனிமேல் பத்திரபதிவு துறை செய்யும் பரிந்துரைகள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் மாதம் இருமுறை இதற்காக கூட்டம் நடத்தி, எத்தனை மனுக்கள் வந்துள்ளன?,

அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பதனை விசாரித்து, தாமதம் செய்த அல்லது தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்ைக மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்தால், மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெப்சைட் எப்போது?
பத்திரம் பதிவு செய்யும்போதே சம்மந்தப்பட்ட சொத்தின் பெயரை வருவாய்த்துறையின் “அ” பதிவேட்டிலும் சார் பதிவாளரே மாற்றும் வகையில் வெப் சைட் உருவாக்கப்பட்டது. ஆனால், இதற்கு கிராம நிர்வாக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதை அடுத்து, இந்த திட்டம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இந்த வெப்சைட் தொடங்கினால் சொத்து வாங்குபவர்களும் அலைய தேவையில்லை. கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் துணை தாசில்தார்களுக்கும் வேலைப்பளு குறையும்.

Tags : Government departments ,Tamil Nadu , Government departments clashing in Tamil Nadu; Shameless self-promotion for Ballistic Products and a great bargain on a neat little knife for you
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...