×

விவசாயிகளின் போராட்டத்திற்கு வழங்கப்படும் அலட்சியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்ம விபூஷண் விருதை திருப்பி அனுப்பிய பிரகாஷ் சிங் பாதல்..!

சண்டிகர் :பஞ்சாப் முன்னாள் முதல்வரும், ஷிரோமணி அகாலிதளத் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் இன்று இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்ம விபூஷனை அரசுக்கு திருப்பி அனுப்பினார். மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 8வது நாளாக போராடி வருகின்றனர்.விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் 2015’ம் ஆண்டில் பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட 92 வயதான பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதினை அரசுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திற்கு எழுதிய கடிதத்தில், விவசாயிகளின் போராட்டத்திற்கு வழங்கப்படும் அதிர்ச்சியூட்டும் அலட்சியம் மற்றும் அவமதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பத்ம விபூஷண் விருதினை அரசுக்கு திருப்பி அனுப்புகிறேன். ஒவ்வொரு விவசாயியும் கடுமையான குளிர்ச்சிக்கு மத்தியில் அவர்களது வாழ்வதற்கான அடிப்படை உரிமையைப் பெறுவதற்காக போராடுகின்றனர். ஆனால் விவசாயிகளின் உரிமையை மத்திய அரசு நசுக்குகின்றனர். அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள் மீது பரப்பப்படும் வகுப்புவாத தூண்டுதல்களால் தான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன், என்றார். முன்னதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் பாஜகவின் கூட்டணியில் நீண்டகாலமாக இருந்த ஷிரோமணி அகாலிதளம், விவசாய மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது நினைவுக் கூறத்தக்கது.


Tags : Prakash Singh Badal ,protest ,Padma Vibhushan , Farmers, Padma Vibhushan, Award, Prakash Singh Badal
× RELATED அரியலூர் மாவட்டத்தில் பத்ம விபூஷன் விருது பெற அழைப்பு