ஆம்பூர் அருகே வனப்பகுதியில் சாராய மூலபொருட்கள், கொட்டகை தீயிட்டு அழிப்பு

ஆம்பூர்: ஆம்பூர் அருகே வனப்பகுதியில் கள்ள சாராய மூலபொருட்கள் மற்றும் தங்கும் கொட்டகை ஆகியவற்றை வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தீயிட்டு அழித்தனர். ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே ஆந்திர மாநில எல்லையை ஒட்டி மாதகடப்பா காப்பு காடுகள் உள்ளன. மேல்குப்பம் ஊராட்சியை ஒட்டி உள்ள இந்த தரைக்காடு பகுதியில் அதிகளவில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக இயற்கை வன ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வந்தனர். இந்த தரைக்காட்டில் இருந்து கள்ளச் சாராயம் தயாரிக்க தேவையான வெல்லம், மரப்பட்டைகள் ஆகியவை கழுதைகள் மூலமாக கொண்டு செல்லப்படுகின்றன. சுமார் 3 கிமீ தூரம் பாரம் தூக்கி செல்லும் கழுதைகளின் மேல் ரிட்டன் லோடாக கள்ள சாராய கேன்கள் கட்டி தரைக்காட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கேன்கள் மூலமாக கொண்டு வரப்படும் இந்த கள்ள சாராயம் தரைக்காட்டில் உள்ள சாராய வியாபாரிகள் பெற்று செல்கின்றனர். இந்த கள்ள சாராயம் பின்னர் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இந்த இடங்கள் வாகனங்கள் செல்ல இயலாத நிலையில் உள்ளதால் கள்ள சாராயம் காய்ச்சுவோர் கொட்டகை அமைத்து மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதை இடையூறு இன்றி செய்து வருவதாக வனத்துறையினருக்கு புகார்கள் வந்தன.

இதை தொடர்ந்து ஆம்பூர் வனசரகர் மூர்த்தி தலைமயிலான வனத்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று அப்பகுதிக்கு சென்றனர். அதிகாரிகளை கண்ட கள்ள சாராய ஆசாமிகள் அங்கிருந்து புதர் நடுவே தப்பி ஓடி தலைமறைவாயினர். உடனே அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு அங்கு இருந்த 650 லிட்டர் கள்ள சாராய ஊறல்கள் மற்றும் மூலப்பொருட்களான மரபட்டைகளை தீயிட்டு அழித்தனர். மேலும், தங்குவதற்கு ஏதுவாக வனப்பகுதியில் உள்ள மலைக்காட்டில் அமைக்கப்பட்ட கொட்டகைகளையும் தீயிட்டு கொளுத்தினர்.

Related Stories:

>