×

அரசு பஸ்சின் பின்புற சக்கரத்தில் விழுந்து பலி: மோசமான சாலை பெண் உயிரை பறித்தது

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பைக் மீது அரசு பஸ் மோதி பெண் பலியான சம்பவம் நடந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நாகர்கோவில் வடசேரி அருகுவிளை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். திருச்சியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி வளர்மதி (38). நேற்று முன் தினம் மாலை கணவன், மனைவி இருவரும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக ரோட்டில் உள்ள நகை கடைக்கு பைக்கில் சென்றனர். கலெக்டர் அலுவலக சிக்னல் அருகே சென்ற போது, அந்த வழியாக வடசேரியில் இருந்து பார்வதிபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வளர்மதி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கி, பரிதாபமாக இறந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து பஸ் டிரைவர் ஈசாந்திமங்கலம் பகுதியை சேர்ந்த கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

சம்பவ இடத்தில் உள்ள 2 வர்த்தக நிறுவனங்களின் சிசிடிவியில் விபத்து காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி உள்ளது. அந்த காட்சிகள் அனைவரின் நெஞ்சையும் பதற வைப்பதாக உள்ளது.
விபத்து நடந்த இடத்துக்கு சிறிது தொலைவில் கலெக்டர் அலுவலக சிக்னல் உள்ளது. அந்த பகுதியில் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படவில்லை. இதனால் பள்ளங்கள் அதிகமாக காணப்படுகின்றன. இந்த சாலையின் நடுவே சென்டர் மீடியன் உள்ளது. பள்ளங்கள் உள்ளதால் சாலையின் அகலமும் மிக குறைவாகவே உள்ளது.

செந்தில்குமார் சாலையில் ஓரமாகவே பைக்கில் வந்துள்ளார். ஆனால் அந்த பகுதியில் காணப்பட்ட பள்ளத்தில் பைக் இறங்காமல் இருக்க சற்று வலதுபக்கமாக பைக்கை திருப்பி உள்ளார். அப்போது சிக்னல் விழுவதற்கு முன்பு சென்றுவிட வேண்டும் என்ற அவசரத்தில் பஸ் டிரைவர் வேகமாக, அஜாக்கிரதையாக வந்துள்ளார். இதுவே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று காலை விபத்து நடந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போக்குவரத்து அதிகாரிகள் பார்வையிட்டனர். நாகர்கோவில் மாநகரில் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால், பைக்கில் செல்பவர்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

Tags : Government bus crashes ,road , Road accident, woman, killed
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி